ராஜாகுப்பம் ஆசிரியர் கோபிநாத்துக்கு தேசிய நல்லாசிரியர் விருது – கலையும் கல்வியும் இவர் சிறப்பு! | Rajakuppam teacher Gopinath

Estimated read time 1 min read

வேலூர்: ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையிலான இடைவெளியை குறைக்க சீருடை அணிவதுடன் கலை நிகழ்ச்சிகள் மூலம் பாடங்கள் நடத்தி வரும் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் தெருவிளக்கு கோபிநாத் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 50 ஆசிரியர்கள் கொண்ட இந்த பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாகுப்பம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோபிநாத்.

குக்கிராமத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேர்வாகி இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியரின் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய தேசிய அங்கீகாரமாக சக ஆசிரியர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர் கோபிநாத் என்பதைத் தாண்டி தெருவிளக்கு கோபிநாத் என்பதுதான் இவரது மற்றொரு அடையாளமாக இருக்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்களைப் போல் சீருடை அணிந்து வகுப்புக்கு செல்வது, மாணவர்களின் கற்றலை அதிகரிக்க திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார் வேடங்களில் சென்று பாடங்கள் எடுப்பது இவரது தனிச்சிறப்பு. அத்துடன் தோல்பாவை நிகழ்ச்சிகள் மூலம் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அத்துடன் சுமார் 90 பேர் பயன்பெறும் தெருவிளக்கு என்ற இரவு பள்ளியையும் நடத்தி வருகிறார்.

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் இடம் பிடித்துள்ள ஆசிரியர் கோபிநாத் கூறும்போது, ‘‘அம்மா பானுமதி, அப்பா ராஜேந்திரன் இருவரும் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். மூத்த சகோதரர் ஜெகநாதன், தங்கை ரமணிபாய் ஆகியோரும் ஆசிரியர்கள். எனது மனைவி வெங்கடேஸ்வரியும் குடியாத்தம் காந்திநகர் உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மொத்த குடும்பமும் ஆசிரியர் தொழில் பின்னணி என்ற நிலையில் 2005-ல் ஆசிரியர் பணியை தொடங்கினேன்.

எனது பணிக்காலத்தில் ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் பயத்தை போக்க விரும்பினேன். ஆசிரியர் மாணவர் இடையிலான இடைவெளியை குறைக்க எண்ணி சீருடை அணிந்து பள்ளிக்குச் சென்றேன். இதைப் பார்த்த மாணவர்கள் ‘டேய் டீச்சர பாருடா… நம்மள மாதிரியே வர்றார்’ என்றனர். இதுதான் எனது நோக்கத்தின் முதல் வெற்றியாக பார்த்தேன்.

சிறிய வயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரையும் பழக்கம் இருக்கிறது. எனது வகுப்பில் பாடம் நடத்தும்போது படம் வரைந்து பாடம் நடத்தினேன். இது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது’’ என்றார்.

வகுப்பில் பாடம் எடுப்பதில் வித்தியாசத்தை காட்ட விரும்பிய ஆசிரியர் கோபிநாத், திருக்குறள் பாடம் நடத்தும்போது திருவள்ளுவரைப் போன்றும், பாரதியார் பாடல் பாடம் நடத்தும்போது அவரைப் போன்றும், ஒளவையாளர் குறித்த பாடல் வகுப்பு நடத்த ஒளவையார் போன்று புடவை அணிவதுடன் மீசையை மழித்தும் சென்றிருக்கிறார்.

தெருவிளக்கு கோபிநாத் என்ற பெயர் காரணம் கேட்டதற்கு, ‘‘தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள் மாலை நேரத்தில் கல்வி பெறும் வகையில் இரவு பள்ளியை நடத்தி வருகிறேன். இங்கு சுமார் 90 பேர் படிக்கின்றனர். ஒரு தெருவிளக்கு தன்னால் எவ்வளவு தொலைவுக்கு வெளிச்சத்தை காட்ட முடியுமோ அப்படி எனது கல்விச் சேவை தொடர விரும்பி தெருவிளக்கு இரவு பள்ளியை நடத்தியதால் அந்த பெயர் வந்தது’’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘அசாம் மாநிலத்தில் பொம்மலாட்ட கலையை கற்று வந்தேன். அப்போது, தோல் பாவை கூத்தும் கற்கும் வாய்ப்பு வந்தது. அதை முறைப்படி கற்றதுடன் தோல் பொருட்களை வாங்கி அதை அழகிய பொம்மைகைளாக மாற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தேன். நான் பயிற்சி அளித்த மாணவர்கள் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாவில் தோல்பாவை கூத்து பிரிவில் மாநில அளவில் தொடர்ந்து இரண்டு முறை இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர்’’ என்றார் பெருமையாக.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours