சென்னை: சென்னை ஜாபர்கான்பேட்டை இந்திராகாந்தி தெரு எஸ்.எம். பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தகவலறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் ரவி தலைமையில் 10 பேர் அந்த வீட்டின் முன்பு திரண்டனர்.
இதுபற்றி தகவலறிந்து சைதாப்பேட்டை சிவில் சப்ளை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ராகினி ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். நகர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் போலீஸார் விரைந்து சென்றனர். குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 4 மூட்டைகளில் ரேஷன் புழுங்கல் அரிசியும், 4 மூட்டைகளில் பச்சரியும், 2 மூட்டைகளில் தனியார் அரிசியும் இருந்தது.
ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்துக்கு விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜாவும் வந்து நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார்.
அப்போது அவரிடம், இந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதுகுறித்து விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்எல்ஏ உறுதியளித்தார்.
ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இப்பகுதியை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டறிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இட்லிமாவு விற்பனைக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.