மதுரை: குடும்பப் பிரச்சினை புகாரில் மனைவியிடம் ஒப்படைப்பதற்காக கணவர் கொடுத்த நகைகளை ஒப்படைக்காமல், 38 பவுன் நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் திருமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி மகன்ராஜேஷ். மென்பொருள் பொறியாளரான இவர், பெங்களூருவில் பணியாற்றுகிறார். இவருக்கும், இவரது மனைவி அபிநயாவுக்கும் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை தொடர்பாக, திருமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் கீதா விசாரணை நடத்தினார். திருமணத்தின்போது தனக்கு பெற்றோர் வழங்கிய சீர்வரிசை மற்றும் 100 பவுனுக்கும் அதிகமான தங்க நகைகளை அபிநயா திருப்பிக் கேட்டார். இதையடுத்து, அபிநயாவின் 100 பவுன் நகைகளை காவல் ஆய்வாளர் கீதாவிடம் ராஜேஷ் ஒப்படைத்தார்.
ஆனால், அந்த நகைகளை காவல் ஆய்வாளர், அபிநயாவிடம் ஒப்படைக்காமல், தனது சொந்ததேவைக்காக அடகுவைத்துள்ளார். இதையறிந்த ராஜேஷ் தந்தை ரவி, பெண் ஆய்வாளருக்கு எதிராக கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் விசாரித்தனர். இதில், பெண் காவல்ஆய்வாளர் நகைகளை அபகரித்தது உண்மை என்பது தெரிந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் கீதா, தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில், வழக்கில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக, அபகரித்த நகைகளை திரும்பி ஒப்படைத்ததாக ஆய்வாளர் கீதா கூறினார். ஆனால், 100 பவுனில் 62 பவுன் நகைகளை மட்டும் ஒப்படைத்துவிட்டு, 38 பவுனை கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் கீதா மீது திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீஸார், மோசடி வழக்கு பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர். திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் காவல் ஆய்வாளர் கீதாவின்கணவரும், மதுரை காவல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.