பெங்களூரு: கர்நாடகாவில் இன்சூரன்ஸ் பணத்துக்காக தொழிலதிபர் ஒருவர் தனதுசாயலில் இருந்த பிச்சைக்காரரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் அவருக்குஉடந்தையாக இருந்த மனைவி,லாரி ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகமது சுஜீதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஹாசனை அடுத்துள்ள கொல்லரஹள்ளியில் கடந்த 13-ம் தேதி கார் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விபத்துக்குள்ளான காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.
அந்த வாகனம் பெங்களூருவைஅடுத்துள்ள ஹொசக்கோட்டையை சேர்ந்த முனுசாமி கவுடாவுக்கு (48) சொந்தமானது என்பது தெரிந்தது. முனுசாமியின் மனைவி ஷில்பா ராணி (41) இறந்த சடலத்தை தனது கணவர் என அடையாளம் காட்டி, பிரேதத்தை பெற்றுச் சென்றார். பின்னர் பிரேதத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கையும் செய்தார்.
இதற்கிடையே பிரேதப் பரிசோதனை அறிக்கையில் விபத்தில் இறந்ததாக சொல்லப்பட்ட முனுசாமி கவுடா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இறந்ததாக சொல்லப்பட்ட முனுசாமி கடந்த 23-ம் தேதி தனது உறவினரும் காவல் ஆய்வாளருமான சீனிவாஸை சந்தித்து பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாஸ் இந்த சம்பவம் குறித்து ஹாசன் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் ஷில்பா ராணியையும், லாரி ஓட்டுநர் தேவேந்திர நாயகாவையும் பிடித்து விசாரித்தனர்.
இதில், தொழிலதிபர் முனுசாமி கவுடா தனது பெயரில் செலுத்தப்பட்டுள்ள ரூ.5 கோடிக்கான இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக, தனது சாயலில் இருந்த பிச்சைக்காரர் மாரி சாமியை (50) கழுத்தை நெரித்து கொன்றதும் பிறகு போலியாக விபத்தை ஏற்படுத்தி நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் முனுசாமி கவுடா, அவரது மனைவி ஷில்பா ராணி, லாரி ஓட்டுநர் தேவேந்திர நாயகா உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.
கைதான முனுசாமி கவுடாவை விசாரித்தபோது, தொழிலில் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக இன்சூரன்ஸ் பணத்தை எடுக்க முடிவெடுத்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.