மிகவும் பின்தங்கிய பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக, அந்த சமூக மக்கள் அதிகமாக வாழும் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 299 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளும் 134 விடுதிகளும் செயல்படுகின்றன. மொத்தம் 26,154 மாணாக்கர்கள் பயிலும் இந்த பள்ளிகளில் கல்வி சார்ந்த விஷயங்களை பள்ளிக்கல்வித்துறை கவனிக்கிறது. ஆனால், நிர்வாகம் மொத்தத்தையும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைதான் கவனிக்கிறது.
இந்நிலையில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை தங்களுடன் இணைக்க பள்ளிக்கல்வித்துறை தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கி உண்ணாவிரத போராட்டம் நடத்தி இருக்கிறது. இந்த போராட்டத்துக்கு பின்னணியில் எடப்பாடியின் சில அரசியல் கணக்கும் இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க விவரப்புள்ளிகள்.
இதுதொடர்பாக அ.தி.மு.க சீனியர் அமைப்பு செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்.
“முக்குலத்தோர் சமூக வாக்கு பெரும்பான்மையாக இருக்கும் தென்மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் வீழ்ச்சி தொடர் கதையாகிவிட்டது.
இதனால்தான் ‘கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும்’ என்ற பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால், அந்த மூவரால் தென்மாவட்டத்தில் எதையுமே செய்ய முடியாது என்பதுதான் எடப்பாடியின் எண்ணம். இருப்பினும், நாலா பக்கமும் இருந்து அழுத்தம் கூடிக் கொண்டே செல்கிறது. இதனால்தான், சமீபத்தில் முக்குலத்தோர் நிர்வாகிகளிடம் சில ஆலோசனை மேற்கொண்டார் எடப்பாடி. முக்குலத்தோர் வாக்குகள் சிதற சசிகலா, ஓ.பி.எஸ் மட்டும் காரணமில்லை. உங்கள் தலைமையிலான ஆட்சியில் கவுண்டர் சமூகத்துக்கான முக்கியத்துவம், வன்னியருக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு போல, முக்குலத்தோருக்கென்று எந்தவித முக்கியத்துவமும் கிடைக்கவில்லை.
இத்துடன் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் நீக்கம், அந்த சமூகத்தையே நீங்கள் ஓரம் கட்டிவிட்டதாக பரப்பப்பட்ட பிரசாரம் எடுபட்டுவிட்டது. உங்களை எப்படி அந்த சமூகம் எதிரியாக பார்க்கிறதோ… அதைபோலதான் எங்களையும் பார்க்கிறார்கள். இதை சரிசெய்தாலே இணைப்பு பேச்சு, தாமாக நீர்த்துபோய்விடும்.” என்றிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், கள்ளர் சீரமைப்பு பள்ளி விவகாரம் தாமாக கிடைத்தது. அதில் அந்த சமூகத்துக்கான பிரச்னையும் இருப்பதால் அதிமுக களமிறங்கியது. அதன்படிதான், முக்குலத்தோர் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து, போராட்டம் நடத்த எடப்பாடி முடிவெடுத்தார். போராட்ட ஒருங்கிணைப்பாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ் சத்யன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி, பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி உள்ளிட்ட பல சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தை அதிமுக மட்டுமே கையில் எடுத்து போராட்டம் நடத்தி இருக்கிறது. முக்குலத்தோர் சமூக பிரதிநிதிகள் என்று சொல்லும் சசிகலாவோ… தினகரனோ… ஓ.பி.எஸ்-ஸோ எதுவுமே செய்யவில்லை. வெறும் அறிக்கையை விட்டுவிட்டு கழண்டு கொண்டுவிட்டனர். அதனால் அந்த சமூகத்துக்கு அதிமுக பக்கம் நம்பிக்கை வரும் என்பது எடப்பாடி தரப்பின் நம்பிக்கை. ஆனால் இந்த நம்பிக்கையை வலுப்படுத்த தொடர் முக்கியத்துவம் அவசியம்.” என்றனர் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
+ There are no comments
Add yours