மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடந்த உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகள் பிரச்னை குறித்து எடப்பாடி பழனிசாமி முதலில் அறிக்கை வெளியிட்டார், அரசு செவி சாய்க்கவில்லை. அதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தவுடன் அரசின் சார்பில் விளக்கங்கள் வந்தது. தென் மாவட்ட மக்கள் மீது பாதுகாப்பு அரணாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்பது செக்கானூரணி போராட்டத்தின் மூலம் மக்களுக்கு புரிந்துவிட்டது.
ஸ்பெயின், ஜப்பான், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அந்நிய முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் ஏற்கெனவே சென்றார். தற்போது மீண்டும் செல்கிறார். `மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் 9.99 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தோம், பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டன, அதன் மூலம் 18 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளோம்’ என்ற புள்ளி விபரத்தை வெளியிட்டார். ஆனால், தமிழகத்தில் வறுமை ஒழிக்கவில்லை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள், உண்மையிலேயே 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகம் சொர்க்க பூமியாக மாறி இருக்கும்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வட மாநிலங்கள் நிதியை அள்ளி சென்றுவிட்டன, சுட்டுக் கொல்லப்படுகிற மீனவர்களை காக்க தவறிய, கச்சதீவை மீட்க தவறிய, 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு மத்திய அரசிடம் ஒத்த பைசா நிதி வாங்க யோக்கியதை இல்லாத முதலமைச்சர், அமெரிக்கா பயணம் சென்று என்ன கிழிக்க போகிறார் என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள். பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சென்று நிதி தாருங்கள் என்று முற்றுகையிட்டு தமிழகத்திற்கு நிதியை பெற்று தந்திருக்கலாம்.
முதலமைச்சர் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்கிறார். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் எப்படி போவான் என்ற கதையாக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு மூலம் நிதியை பெற முடியாதவர் எப்படி வெளிநாடு சென்று முதலீட்டை ஈர்ப்பார். நான்கு முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து எடப்பாடியார் வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று கூறுகிறார், வெள்ளை அறிக்கை விடுவது மரபு அல்ல என்று முதலமைச்சர் கூறுகிறார்.
மத்திய அரசிடம் நிதியை பெற்றுத்தர முடியவில்லை. ஆனால், தன் அப்பாவிற்கு நாணயத்தை வெளியிட மத்திய அமைச்சரை அழைத்து வருகிறார். கேட்டால் மத்திய அரசு விழா என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்.
அதேபோல், ஐபிஎஸ் படிப்பது கடினம் என்றும், கஷ்டப்பட்டு படித்தேன் என்றும் அண்ணாமலை கூறுகிறார். மற்றவர்களும் அப்படித்தானே படித்திருப்பார்கள். கல்லூரி காலங்களில் தமிழக மக்களுக்காக, தமிழக உரிமைக்காக போராடி சிறை சென்றுள்ளதாக அண்ணாமலை கூற முடியுமா? ஆனால் நாங்கள் மாணவப் பருவத்திலிருந்து மக்களின் பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்தி சிறை சென்றுள்ளோம்.
அண்ணாமலை நாவை அடக்கி பேச வேண்டும். எடப்பாடியார் மலை, அண்ணாமலை மடு. எடப்பாடியார் யானை, அண்ணாமலை கொசு. எடப்பாடியார் எந்த பதவியையும் தேடிப் போகவில்லை, பதவிகள் அவரைத் தேடி வந்தது.
இன்றைக்கு திமுக-வில் சீனியர்கள், ஜூனியர்கள் சண்டை தொடங்கிவிட்டது. இந்த சண்டைக்கு சத்தமில்லாமல் ரஜினிகாந்த் நெருப்பை பற்றவைத்துள்ளார், இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் நகைச்சுவை, பகைச்சுவையாக மாறிவிட்டது என்று அடுக்குமொழியில் பேசி வருகிறார்கள். இப்பிரச்னையை அணைக்கும் முயற்சியில் வைரமுத்துவும் முதலமைச்சரும் தொடர்ந்து இறங்கி உள்ளனர். அது காட்டுத்தீயாக பரவி விட்டது அதை எளிதில் அணைக்க முடியாது. இனி எப்போதும் வேண்டுமானாலும் திமுக-வில் அனல் பறந்து வெடிக்கும் அது ஆண்டவனுக்கு தான் தெரியும்” என்றார்.
+ There are no comments
Add yours