ஆவடி: ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்தது தொடர்பாக செங்குன்றம் அருகே கைதான ஊராட்சி தலைவரின் கணவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் ஊராட்சியின் முன்னாள் தலைவரும், அதிமுக ஜெயலலிதா பேரவை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான பார்த்திபன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி கும்பல் ஒன்றால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பாடியநல்லூர்- சோலையம்மன் நகரை சேர்ந்த முத்துசரவணன் (35), ஞாயிறு பகுதியை சேர்ந்த சண்டே சதீஷ்(32) ஆகிய இரு ரவுடிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி சோழவரம் அருகே மாரம்பேடு பகுதியில் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பார்த்திபன் முதலாண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது அண்ணனும், பாடியநல்லூர் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமியின் கணவருமான நடராஜன்(58) கடந்த 18-ம் தேதி தன் முகநூல் பக்கத்தில், சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளை பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக செங்குன்றம் போலீஸார், தகவல் தொழிநுட்ப சட்டம் , கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த 24-ம் தேதி நடராஜனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட நடராஜன் செங்குன்றம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடராஜனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிறையிலடைக்க ஆவடி காவல் ஆணையர் சங்கர் இன்று (ஆக.28) உத்தரவிட்டார்.