தெலுங்கில் ‘Jokali’, ‘Ninne Pelladatha’, ‘Tilottama’ போன்ற தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா ஜெயராம்.
பவித்ராவும், சீரியல் நடிகர் சந்திரகாந்த் இருவரும் ஒன்றாக நடித்து நெருங்கிய நண்பர்களாகி, பின்னர் காதலர்களாகினர். இந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொள்வதாகத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவரும் தங்களது திருமணச் செய்தியை பொதுவெளியில் சொல்லவும் காத்திருந்திருந்தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பவித்ரா – சந்திரகாந்த் இருவரும் கடந்த வாரம் பெங்களூருவில் இருந்து ஹைதராபாதிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, இவர்கள் சென்ற கார் தெலங்கானா மாநிலத்தின் மகபூப்நகர் அருகே விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். சந்திரகாந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். பவித்ராவின் திடீர் உயிரிழிப்பு அவரின் குடும்பத்தையும், சந்திரகாந்த்தையும் உலுக்கியது.
சந்திரகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உன்னுடன் நான் எடுத்த கடைசிப் படம் இதுதான். இப்படி நீ என்னை தனியே தவிக்க விட்டுச் சென்றதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கண்ணீரைத் துடிக்க தயவு செய்து திரும்பி வா பவி” என்று பதிவிட்டிருந்தார். பவித்ராவின் இழப்பால் மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளான சந்திரகாந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவித்ராவின் இழப்புக் குறித்துத் தொடர்ந்து சோகமாகப் பதிவிட்டு வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று (மே 18ம் தேதி) தெலங்கானா மாநிலம் ரெங்கரெட்டியில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கிட்ட படி சந்திரகாந்த் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மிகுந்த வருத்தத்துடன் பேசியிருக்கும் அவரது குடும்பத்தினர், “பவித்ராவின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாத சந்திரகாந்த், கொஞ்ச நாட்களேவே மிகந்த சோகத்தில் இருந்தார். சரியாகிவிடுவார் என்று நினைத்தோம். ஆனால், இந்த சோகமான சம்பவம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று கண்ணீருடன் பேசியிருக்கின்றனர். தனது காதலி பவித்ரா இறந்த சில நாட்களில் சந்திரகாந்தும் பரிதாபமாக இறந்துள்ளது தெலுங்கு சீரியல் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
+ There are no comments
Add yours