பாலிவுட்டில் இன்னும் பயோபிக் கலாசாரம் ஓய்ந்தபாடில்லை. இந்தத் தேசத்தின் ஹீரோக்களாக மக்கள் போற்றும், போற்றப்பட வேண்டும் எனச் சிலர் நினைக்கும் அனைவரைப் பற்றியுமே பாலிவுட் பெரும் ஸ்டூடியோக்களின் மேஜைகளில் ஸ்கிரிப்ட்கள் பைண்டிங்குடன் தயாராக இருக்கும் என்றே தோன்றுகிறது. இதற்கு நடுவில் இம்தியாஸ் அலி இயக்கியிருக்கும் `அமர் சிங் சம்கிலா’ தனித்துவமான பயோபிக்.
1980-களில் பஞ்சாப்பை தன் இசையால் கட்டிப்போட்ட அமர் சிங் சம்கிலா, பாலிவுட் பயோபிக் படங்களின் சராசரி ஹீரோ அல்ல. மெகா ஹிட்டாக விற்பனையில் சக்கை போடு போட்டிருந்தாலும், அவரது பாடல்களில் இடம்பெற்ற ஆபாச வரிகள் சமூகத்தைச் சீரழிக்கின்றன என எதிர்ப்புகளும் வெடித்தன. 27 வயதிலேயே அவரும் அவர் மனைவியும் சுட்டுக்கொல்லப்பட அதுவே காரணமானது. இந்தச் சர்ச்சை நாயகனின் வாழ்க்கையின் மூலம் கலை, பண்பாடு குறித்த நீண்ட உரையாடலை நிகழ்த்த முயற்சி செய்திருக்கிறார் இம்தியாஸ் அலி.
படம் சம்கிலா கொலை செய்யப்படும் படலத்திலிருந்தே தொடங்குகிறது. அவருக்கு நெருக்கமானவர்கள், அவரைப் பற்றிச் சொல்லும் நினைவுகளாக அவரது வாழ்க்கையில் முன்னும் பின்னுமாக நகர்கிறது திரைக்கதை. வழக்கத்திலிருந்து தனித்து நிற்கும் கதாபாத்திரங்களை நாயகனாக வைத்து ‘ராக்ஸ்டார்’, ‘தமாஷா’ போன்ற படங்களை இயக்கிய இம்தியாஸ் அலி, ஏன் சம்கிலாவின் கதையால் ஈர்க்கப்பட்டார் என்பதில் பெரிய வியப்பு எதுவுமில்லை. இது அவருக்கான களம். கடந்த சில படங்களில் சறுக்கல்களைச் சந்தித்த அவர், மீண்டும் முழு ஃபார்மில் திரும்பி வர இந்தக் களம் அவருக்குப் பெருமளவில் உதவியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நடிகர்கள் தேர்வு தொடங்கி இசை, காட்சியமைப்பு, எடிட்டிங் என அனைத்திலும் அவரது ஆளுமை வெளிப்படுகிறது.
மூன்றாவது மனிதர்களிடமிருந்தே பெரும்பாலும் சம்கிலாவின் வாழ்க்கையை நாம் தெரிந்துகொள்கிறோம் என்பதால் முழுவதுமாக அவர் யார் என்பது கடைசி வரை புதிராகவே இருக்கிறது. ஏன் அவர் முதல் மனைவி குறித்து யாரிடமும் சொல்லவில்லை, நெருங்கிய நண்பரை ஏன் கனடாவுக்கு அழைத்துச் செல்லாமல் விட்டுச்சென்றார் போன்ற பல கேள்விகளுக்குப் படத்தில் பதில் இல்லை. ஆனால், இயக்குநரின் நோக்கமும் அதுதான் என்றே தோன்றுகிறது.
பொதுவாக இது போன்ற பயோபிக் படங்களில் நடிகர்கள்தான் அந்தக் கதாபாத்திரமாக இருக்கிறார்கள் என்பதை நம்ப வைக்க மிகவும் மெனக்கெடுவார்கள். படம் முடிந்த பிறகுதான் உண்மை நிகழ்வுகளின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் காட்டுவார்கள். ஆனால், இம்தியாஸ் அலி காட்சிகளுக்கு நடுவிலேயே உண்மையான சம்கிலாவின் படங்களைக் காட்டுகிறார். நீங்கள் பார்ப்பது உண்மை சம்பவங்கள் அல்ல சித்திரிப்புகளே என்பதாக அதை எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கதையின் வழியே அன்றைய பஞ்சாப்பின் சமூகச் சூழல், அரசியல் நிலவரம், சாதிய கட்டமைப்பு என அனைத்தையுமே காட்சிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் முக்கிய பலம் அதன் நடிகர்கள். தில்ஜித் தோசன்ஜ் அமர் சிங் சம்கிலாவை மிகவும் நேர்த்தியாகச் சித்திரித்திருக்கிறார். ஏழ்மையிலிருந்து மீளத் தும்பியைக் கையிலெடுக்கும் சம்கிலாவாக அவரது வசீகரம், துடிப்பு, ஆற்றாமை என அனைத்தையும் அப்படியே திரைக்குக் கொண்டுவந்திருக்கிறார். சம்கிலாவின் மனைவியும் துணை பாடகியுமான அமர்ஜோத்தாக பரினீதி சோப்ராவும் சிறப்பாக நடித்திருக்கிறார். சம்கிலாவின் ஹிட் பாடல்களை இருவரும் அதே துடிப்புடன் படத்திற்காக மீண்டும் பாடியிருப்பதும் சிறப்பு. குறைவான துணை கதாபாத்திரங்கள் என்றாலும் நிறைவான பாத்திரங்களாக அனைவரும் வந்துபோகிறார்கள். சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் வசனங்களும் காட்சிகளுக்குக் கூடுதல் பலம் சேர்க்கின்றன.
படத்தின் மற்றொரு நாயகன் பின்னணியில் இருக்கும் மற்றொரு இசைக் கலைஞன், ஏ.ஆர்.ரஹ்மான். அவரது உணர்வுபூர்வமான பின்னணி இசை, படத்தின் மிக முக்கிய தூண். சம்கிலாவின் பாடல்கள் ஒருபுறம், மௌனம் நிறைந்த காட்சிகள் மறுபுறம் என மிகவும் தேவையான இடங்களில் மட்டும் அழுத்தமான இசையைக் கொடுத்திருக்கிறார். ரஹ்மானின் பாடல்களைக் கதையை நகர்த்தும் ஒரு முக்கிய கருவியாகவே பயன்படுத்தியிருக்கிறார் இம்தியாஸ். சம்கிலா யார் என்ற கேள்வியை எழுப்பும் முதல் பாடல் ‘பாஜா’, அவரது எழுச்சியைக் காட்டும் ‘இஷ்க் மிட்டாயே’, அவரது விடைபெறலுக்கு வரும் ‘விடா கரோ’ எனப் பாடல்களில் இம்தியாஸுடனான ரஹ்மானின் ஹிட் கூட்டணி தொடர்கிறது.
சில்வெஸ்டர் ஃபொன்சேகாவின் ஒளிப்பதிவில் இருக்கும் எளிமை அன்றைய பஞ்சாப்புக்கு நம்மைக் கூட்டிச்செல்லப் பெரிய அளவில் உதவியிருக்கிறது. பீரியட் படமென்றாலும் அதன் தன்மை கெடாமல் இன்றைய நவீன எடிட்டிங் முறைகளையும் உள்ளே சேர்த்து அழகாகப் படத்தைக் கோர்த்திருக்கிறார் ஆர்த்தி பஜாஜ்.
எளியவர்களின் கலையை, ரசனையைச் சிலர் வகுத்த ஒழுக்க நெறிகளை வைத்து கொச்சை என ஒதுக்குவது சரியா; எல்லை மீறுவது கலைஞர்களா, கலாசார காவலர்களா என இன்றைய சமூகச் சூழலுக்கும் தொடர்புடைய பல கேள்விகளை எழுப்புகிறது படம். `புனிதர்கள்’ நிறைந்த பூமியில் வாழ்ந்த யதார்த்த கலைஞனான `அமர் சிங் சம்கிலா’ நிச்சயம் நாமும் பரிச்சயப்படவேண்டிய ஒரு மனிதர்தான்!
+ There are no comments
Add yours