அறிவாக விஜய் ஆண்டனி பக்காவான தேர்வு. அதிர்ந்து பேசாத குரல், ஊக்கமளிக்கும் யதார்த்த வசனங்கள் என அவருக்காகவே எழுதியதைப் போலக் கச்சிதமாக அமைந்திருக்கிறது இந்தக் கதாபாத்திரம். குறையாகச் சொல்லப்படும் அவரது சில எக்ஸ்பிரஷன் இல்லாத ரியாக்ஷன்ஸ், இந்தக் கதையின் ஒரு எபிசோடில் ரொம்பவே கை கொடுத்திருக்கிறது. எமோஷனல் காட்சிகளிலும் சறுக்கல்கள் இன்றி கரையேறுகிறார்.
லீலாவாக மிருணாளினி ரவி, முழுமையான நடிப்புத்திறனை வெளிப்படுத்த ஏதுவான கதாபாத்திரம். குறையெதுவும் இல்லாமல் அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு வெள்ளித்திரையில் இதுதான் முதல் விசிட்டிங் கார்டு. பல வருடங்களாக சினிமா கனவைச் சுமக்கும் ஒரு பெண்ணின் வலி, ஏக்கம், கோபம் என அத்தனை உணர்வுகளையும் வசனங்கள் இல்லாமலேயே அழகாகக் கடத்துகிறார்.
லீலாவின் நண்பர்களாக வரும் ஷா ரா அண்ட் கோவின் காமெடிகள் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஶ்ரீஜா ரவி எனப் பல சீனியர் நடிகர்கள் தங்களுக்கான வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரங்களின் நடிப்பும் சிறப்பு.
முதன்மை கதாபாத்திரங்களையும் அதன் குணாதிசயங்களையும் சுவாரஸ்யமாக எழுதிய விநாயக், திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம். அதீத ட்ராமாவையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். விஜய் ஆண்டனி பேசும் மோட்டிவேஷன் வசனங்கள் நன்றாக இருந்தாலும், அதை விஜய் ஆண்டனி பேசுவதாலேயே கொஞ்சம் ஓவர் டோஸாகி விடுகிறது.
+ There are no comments
Add yours