‘உணர்வு குவியலுக்கிடையே கொஞ்சம் காமெடிகள்’ என முதற்பாதியில் நகர்ந்த திரைக்கதை, ‘காமெடிகளுக்கு இடையே கொஞ்சம் உணர்வுகள்’ என்பதாக இரண்டாம் பாதியில் வேறு டிராக்கில் பயணம் செய்கிறது. நிவின் பாலி, அஜு வர்கீஸ், பாசில் ஜோஸப் ஆகியோரின் வருகைக்குப் பின் படம் பக்கா காமெடி பொழுதுபோக்கு படமாக மாற முயல்கிறது. நிவின் பாலியின் கதாபாத்திரத்தின் விவரிப்புகள், அவர் செய்யும் சேட்டைகள், ஒன்லைனர்கள் எனச் சிரிப்பிற்கு கேரன்டி தருகிறது இந்தப் பகுதி. இப்படியொரு பாத்திரத்தை ஏற்று நடித்த நிவினுக்குக் கூடுதல் ‘பிரேமம்’ பார்சல்!
மறுபுறம், முதியவர்களான வேணு, முரளியின் இருப்பும், அவர்களுக்கிடையே உணர்வுகளும் படத்தை முதல் பாதியைப் போலவே உணர்வுபூர்வமான ஒன்றாக மாற்ற ரொம்பவே போராடுகின்றன. முதற்பாதியில் அழுத்தமாகக் கட்டமைக்கப்பட்ட கதாபாத்திரங்களையும், தருணங்களையும் இரண்டாம் பாதியில் ஆங்காங்கே நினைவூட்டி, இதையும் ஆழமாக்க முயல்கிறார்கள். ஆனால் அதில் பாதி வெற்றியே கிட்டியிருக்கிறது. முதியவராக தயான் ஸ்கோர் செய்யும் அளவிற்கு, பிரணவ் ஸ்கோர் செய்யவில்லை. அதற்கு மேக்கப்பும் ஒரு காரணம்!
இரண்டாம் பாதி முழுவதுமே எளிதில் யூகிக்கும்படியாக, அதீத செயற்கைத்தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. இது காமெடி காட்சிகளுக்கு மட்டுமே ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றது. நிவின் பாலியின் கதாபாத்திரம் இக்குறைகளை எல்லாம் மறைக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறதே இன்றி, மேம்போக்கான திரைக்கதையைச் சரி செய்யப் பயன்படவில்லை என்பது கூடுதல் சோகம்!
+ There are no comments
Add yours