90களின் தொடக்கம் தமிழ்த் திரையுலகின் பல்வேறு தளங்களில் மாற்றம் நிகழத் தொடங்கியிருந்தது. குறிப்பாக, இசைத் துறையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வருகை, திரை இசையில் பல புதுமையான அதிர்வலைகளைக் கொண்டு வந்திருந்தது. எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி – கமல் என்ற உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் விஜய் – அஜித் இணையத் தொடங்கியிருந்தனர். அதேபோல், கருப்பு – வெள்ளைக் காலத்தில் கர்ஜித்த உச்ச நட்சத்திரங்களுக்கான டி.எம்.சவுந்தர்ராஜனின் குரல், ரஜினி – கமல் காலத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரலாக மாறியிருந்தது. விஜய் – அஜித்தின் வருகைக்குப் பின்னர், அந்த பாரம்பரியத்தை கட்டிக் காத்தது பாடகர் ஹரிஹரனின் குரல் என்றால் அது மிகையல்ல.
இருமுறை தேசிய விருது, தமிழகத்தின் கலைமாமணி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இசைத் துறையில் பாடகருக்கான பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஹரிஹரன். கர்நாடக இசை, இந்துஸ்தானி என எந்த வகையான இசையிலும் பாடல் கேட்பவர்களின் மனங்களைக் கொள்ளைக் கொள்ளும் ஹரிஹரன் ‘கஸல்’ வகை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அழகுத் தமிழை அவரது குரலில் கேட்பது அநாயசமான ஆர்ப்பரிப்பைக் கொண்டு வரும். ஹரிஹரனின் குரலை அதிகமாக பயன்படுத்தியவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான் முக்கியமானவர். அவரது பல படங்களில் ஹரிஹரன் பாடிய பாடல்கள், பெரும்பாலனோரின் பிளே லிஸ்ட்களை ஆக்கிரமித்திருப்பவை.
ரஹ்மானுக்கு மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகின் அத்தனை இசையமைப்பாளர்களின் இசையிலும் ஹரிஹரன் தனி ஆவர்த்தனம் செய்திருப்பார். அவரது குரல்வளத்தின் ஈர்ப்பு தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் அவருக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறது. குறிப்பாக, இரவுநேர நெடுந்தொலைவு பயணங்களில் அவரது மெலோடி பாடல்கள் உற்சாகத்தைக் கொடுப்பவை.
எஸ்பிபி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், மனோ போன்றவர்களுக்குத்தான் இசையமைப்பாளர் இளையராஜா ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் பாடுகின்ற வாய்ப்பைக் கொடுத்திருப்பார். அந்த நடைமுறை வெகுநாட்களாக இல்லாமல் இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, 2001-ம் ஆண்டில் வெளிவந்த ‘காசி’ படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களையும் பாடும் வாய்ப்பை ஹரிஹரனுக்கு இளையராஜா கொடுத்திருப்பார்.
அதேபோல், ரஹ்மான் வந்த அதே காலக்கட்டத்தில் தமிழ் திரையுலகில், கோலோச்சி வந்த இசையமைப்பாளர் தேவாவும், தனது பெரும்பாலான திரைப்படங்களில் கணிசமாக ஹரிஹரனின் குரலைப் பயன்படுத்தியிருப்பார். தேவாவின் இசையில் வந்த திரைப்படங்களில் வந்த மெலோடிப் பாடல்களை ஹரிஹரனின் குரல் சொந்தமாக்கியிருக்கிரும். அந்த வரிசையில், வித்யாசாகர், பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், பரணி என பலரது இசையிலும் ஹரிகரனின் குரலில் வந்த பாடல்களின் பட்டியல் தேர்தல்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்களின் பட்டியலை விட நீண்டது.
வசீகரித்துக்கும், ஈர்ப்புக்கும் அருகில் நம்மை கொண்டு சேர்ப்பது ஹரிஹரனின் குரல். அவரது குரலில் காதல் பாடல்களைக் கேட்கும்போது நாமும் உருகிப்போவோம். தமிழில் அவர் பாடிய பாடல்கள் பலவும், ரசிகர்களுக்கு மாறுபட்ட ஓர் இசை பேரனுபவத்தை எப்போதும் கொடுப்பவை.
நீ பார்த்த பார்வைக்கு… – ஹேராம் படத்தில் வரும் இப்பாடல் மனதை வருடும். ஆஷா போஸ்லே உடன் ஹரிஹரன் குரல் இணைந்து வரும்போது இப்பாடலுக்கு மயங்காதவர் இருக்க முடியாது. இன்று வரை பலரது ஸ்லீப்பிங் டோஸாக இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று என்பதே நிதர்சனம்.
மலர்களே மலர்களே – லவ் பேர்ட்ஸ் படத்தில் சித்ராவுடன் இந்தப் பாடலை ஹரிஹரன் பாடியிருப்பார். மெலோடி வகைப் பாடல்களிலேயே இந்தப் பாடல் ஒரு தனி ரகம். இத்தனைக்கும் இந்தப் பாடலை ஹரிஹரனுக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. அந்த வலியையும் பொருட்படுத்தாமல், அவர் அந்தப் பாடலை பிரசவித்திருக்கும் விதம் எப்போது கேட்டாலும் நம்மை ஆட்கொள்ளும்.
இருபது கோடி நிலவுகள் கூடி – எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், துள்ளாத மனமும் துள்ளும் படத்துக்காக ஹரிஹரன் பாடியிருக்கும் சோலோ பாடல் இது. ஒரு பெண்ணை வருணிக்கும் வகையில் அமைந்த பாடலை அவர் பாடியிருக்கும் விதம் வியப்பில் ஆழ்த்தும். கவித்துவமான வருணனைகளை ஹரிஹரன் தனது குரலால் செதுக்கியிருப்பார்.
உன் உதட்டோரம் சிவப்ப – அனுராதா ஸ்ரீராமுடன் ஹரிஹரன் தேவாவின் இசையில் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் இந்தப் பாடலை பாடியிருப்பார். இப்பாடலில் கிராமத்தில் புழக்கத்தில் இருக்கும் வழக்குச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பார்கள். அதை ஹரிஹரன் குரலில் கேட்பது தனி சுகமாக இருக்கும்.
மூங்கில் காடுகளே – ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளிவந்த சாமுராய் படத்தில், ஹரிஹரன் இப்பாடலை பாடகர் திப்பு உடன் இணைந்து பாடியிருப்பார். இரண்டு ஆண் பாடகர்கள் இணைந்து பாடலை பாடியிருந்தாலும், ஹரிஹரன் வாய்ஸ் வரும் இடங்கள் எல்லாமே தனித்து நிற்கும். அந்தளவுக்கு உச்சஸ்தாயி செல்லும்போதும் சரி, கீழே பாடும்போதும் சரி ஹரிகஹரன் குரல் தனியாக வந்து நம்மை கட்டுப்போட்டுவிடும்.
சொல்லாமல் தொட்டுச் செல்லும் – யுவனின் இசையில் தீனா படத்துக்காக ஹரிஹரன் பாடிய சோலோ பாடல்தான் இது. காதலின் சோகத்தை, ஹரிகரனின் தனித்துவமான குரல் ஆழ்மனதில் அப்பிக்கொள்ளச் செய்யும். கடவுளை வம்புக்கு இழுத்து எழுதப்பட்டிருக்கும் இந்தப்பாடலை எழுதியவரில் இருந்து, பாடல் கேட்ட அனைவரையும் கடவுள் மன்னிக்க காரணமாக இருந்தது ஹரிஹரனின் குரல் மட்டும்தான்.
நீ காற்று நான் மரம் – வித்யாசகரின் இசையில், நிலாவே வா படத்துக்காக ஹரிஹரன் பாடியிருக்கும் கவிதை இப்பாடல். ஹரிகரனின் இசைப் பேராற்றலை உணர்த்தும் மிக அரிய பாடல்களில் இந்தப்பாடலுக்கு மிக முக்கிய இடமுண்டு. காரணம், கஸல் ரக பாடல்களை பாடிப்பாடி பழகிப்போன அவரது குரலுக்கு இந்தப் பாடல் மிகவுமே பொருத்தமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
நிலவே நிலவே சரிகமபதநி – பரணியின் இசையில் பெரியண்ணா படத்தில் ஹரிஹரன் சித்ராவுடன் இணைந்து பாடிய பாடல் இது. இன்றளவும் கிராமப்புறங்களில் ஓடும் மினிப் பேருந்துகளில் நில்லாமல் ஒளித்துக் கொண்டிருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. யாருக்கும் பாரபட்சம் இல்லாத குரல் தன்னுடையது என்பதை நிரூபிக்கும் வகையில் அறிமுக இசையமைப்பாளரான பரணிக்காக இந்தப்பாடலை ஹரிஹரன் பாடியிருக்கும் விதத்தில் ரசனை மிகுந்திருக்கும்.
இன்று – ஏப்.3 – ஹரிஹரன் பிறந்தநாள்