சாவர்கர் அடைபட்ட சிறையில் 20 நிமிடங்கள் கூட தாக்கு பிடிக்க முடியாத ரன்தீப் ஹூடா
27 பிப், 2024 – 12:17 IST
இந்திய சுதந்திர போராட்ட வீரர் சாவர்கரின் வாழ்க்கை வரலாறு ‘சுவாதந்திரியா வீர் சாவர்கர்’ என்ற பெயரில் பாலிவுட்டில் படமாகி வருகிறது. இதனை ரன்தீப் ஹூடா இயக்கி, நடிக்கிறார். ரன்தீப் இதற்குமுன் ஹைவே, சரப்ஜித், சுல்தான் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். வருகிற மார்ச் 22ம் தேதி படம் வெளிவருகிறது.
சாவர்கர் வாழ்க்கையை படமாக்க இரண்டு ஆண்டுகள் வரை ஆய்வு செய்திருக்கிறார் ரன்தீப். இதன் ஒரு பகுதியாக வீர் சாவர்கர் அந்தமானில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு நாள் தங்கி அதன் வலியை அனுபவிக்க திட்டமிட்டவர். 20 நிமிடங்கள் கூட அதற்குள் அமர்ந்திருக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது : ‛‛பாரத மாதாவின் தலைசிறந்த மகன்களில் ஒருவர் வீர் சாவர்கர். தலைவர், பயமறியா சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் தொலைநோக்கு சிந்தனையாளர். உயர்ந்த அறிவாற்றல் மற்றும் தனது தைரியத்தால் அந்த மனிதர் பிரிட்டிஷாரை அச்சமூட்டியதால், காலாபானி (அந்தமான்) சிறையில் அவரது வாழ்நாளில் இரண்டு முறை 7க்கு 11 அடி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் அவர் என்ன செய்திருப்பார் என்பதை அறிந்துகொள்ள அவர் அடைக்கப்பட்ட சிறையில் என்னை நானே அடைத்துக் கொள்ள முயற்சித்தேன். 11 ஆண்டுகள் அவர் அடைப்பட்டுக் கிடந்த தனிமைச் சிறையில் என்னால் 20 நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லை. சிறையில் கொடுமைகளையும், மனிதாபிமானமற்ற சூழலையும் எதிர்கொண்ட வீர் சாவர்க்கரின் இணையற்ற சகிப்புத் தன்மையை கற்பனை செய்து பார்க்கிறேன். அவரது விடாமுயற்சியும், பங்களிப்பும் ஈடு இணையற்றது” என்று எழுதியுள்ளார்.
+ There are no comments
Add yours