ஸ்பானிஷ் மொழி இயக்குநர் ஜே.ஏ.பயோன் (J. A. Bayona) நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்திற்கு இயக்கியிருக்கும் திரைப்படம், `சொசைட்டி ஆஃப் தி ஸ்நோ’ (Society of the Snow).
1972-ம் ஆண்டு ஆண்டீஸ் மலையில் நிகழ்ந்த ஒரு விமான விபத்து குறித்து உருகுவே நாட்டுப் பத்திரிக்கையாளர் பாப்லோ வெர்சி ‘சொசைட்டி ஆஃப் தி ஸ்னோவ்’ என்கிற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதினார்.
இதனைத் திரைவடிவத்திற்கு ஏற்றார் போல மாற்றி முழு நீளப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜே.ஏ.பயோன்.
உருகுவே நாட்டைச் சேர்ந்த ரக்பி வீரர்கள் உட்படப் பலரும் விமானத்தில் பயணிக்கின்றனர். இப்படியான வேளையில் ஆண்டீஸ் மலையின் மேலே பயணிக்கையில் அந்த விமானம் எதிர்பாராத விபத்தைச் சந்திக்கிறது. விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானோர் உயிர் பிழைக்கின்றனர். உயிர் பிழைத்தும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சூழல்களால் சிலர் இறந்துவிடுகிறார்கள். மீதமுள்ள நபர்கள் அந்த பனி மலைகளின் நடுப்பகுதிகளிலிருந்து எப்படி வீடு திரும்பினார்கள் என்பதை ஒரு சர்வைவல் த்ரில்லராக எமோஷன்களும் கலந்து சொல்கிறது படம்.
கொடூர பசி, ஒரு மனிதனைக் கொடுமையின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதைத் தத்ரூபமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். 72 நாள்களாக மலையில் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் பரிதவிப்பையும், எப்படியாவது உயிர் தப்பிவிட மாட்டோமா என்கிற ஏக்கத்தையும் யதார்த்தமாக, அதற்குரிய பதைபதைப்புடன் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநருக்கு அப்ளாஸ்!
இயக்குநரின் அசுர உழைப்புக்கு ஈடு கொடுக்கும் வகையில் பனிப் பிரதேசத்துக்கு இடையே தன் கேமராவை ஊடுருவ வைத்து மிரட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பெட்ரோ லூக் (Pedro Luque). விமானம் விபத்தை நெருங்கும் சமயத்தில் நிலையில்லாத தனது ஷாட்களின் மூலம் அந்தச் சூழலின் பயத்தை அனாயாசமாகக் கடத்துகிறார்.
விபத்தில் சிக்கியவர்களின் முகங்களில் காணப்படும் ஏக்கத்துடன் கலந்த சிரிப்பு, கடும் பசியில் சாப்பிடுவதற்கு உணவு கிடைக்காத வருத்தம், யாராவது நம்மைக் காப்பாற்றிப் போக வந்துவிட மாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு என மனிதர்களின் சின்ன சின்ன எமோஷன்களையும் இவரின் கேமரா கிளோஸ் அப் ஷாட்கள் மூலம் அட்டகாசமாகப் படம் பிடித்திருக்கிறது. ஆங்காங்கே பனிப் பிரதேசத்தின் மலைகளை விவரிக்கும் வகையில் அமைந்த வைட் ஆங்கிள் ஷாட்களும் கொள்ளை அழகு!
இப்படியான பிரமாண்ட தொழில்நுட்ப உழைப்பைத் தாங்கிப் பிடிக்கும் அளவிற்கு நடிகர்களும் தங்களின் பங்கினை அற்புதமாகத் தந்திருக்கின்றனர். புதுமுக நடிகர்களாகப் பலர் களமிறங்கி இதைச் சாதித்திருக்கின்றனர் என்பது கூடுதல் ஆச்சர்யம் தரும் செய்தி. குளிர் நிலப் பகுதிகளின் கடினமான சூழல்களை எடுத்துரைக்கும் ஷாட்களுக்கு ஈடுகொடுத்து, தங்களின் முகபாவங்களிலும் அந்த மிரட்சியைக் கொண்டு வந்து இந்த சர்வைவல் த்ரில்லருக்கு தேவைப்படும் யதார்த்தத் தன்மையைக் கொடுத்திருக்கின்றனர்.
இது போன்ற விஷயங்களுக்குப் படத்தின் படத்தொகுப்பு பாணியும் கூடுதல் வலு சேர்க்கிறது. படத்தின் அத்தனை துளி நகர்வுகளையும் கவனித்து நுட்பமான ஒலிகளையும் அமைத்திருப்பது கூடுதல் ப்ளஸ்! இதுமட்டுமல்ல, மைக்கேல் கியாச்சினோவின் (Michael Giacchino) பின்னணி இசையும் படத்தின் சாரம்சங்களுக்குப் பலம் கூட்டுகிறது.
இப்படியான சர்வைவல் த்ரில்லர் திரைப்படத்திற்காக 3 திரைக்கதையாசிரியர்கள் இயக்குநருடன் பணியாற்றி அழகாகவும், அதே சமயத்தில் தடைகளை ஏற்படுத்தாத வண்ணத்தில் விறுவிறுப்பாக படத்தை நகர்த்தியிருக்கின்றனர். காலநிலை மாற்றங்களால் ஏற்படும் உடல் வேறுபாடுகளை ஒப்பனையால் கொண்டு வந்தது கவனிக்கத்தக்க உழைப்பு!
இப்படத்திற்காக இயக்குநர் பயோன் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு நேரில் செல்வது, அந்த விபத்தில் உயிர் பிழைத்தோரைப் பேட்டி காண்பது எனப் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். 2012 முதல் இத்திரைப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்கிறார்கள். அதற்கான பயன் திரையில் பிரமாண்டமாகவே தெரிகிறது.
இத்தனை ப்ளஸ்கள் இருந்தாலும் டப்பிங்கில் சொதப்பல் என்பது சற்றே நெருடல். அதேபோல விபத்துக்குப் பிறகு, விமானத்தைக் காட்டும் காட்சிகள் எழுத்தாகச் சிறப்பாக இருந்தாலும் டெக்னிக்கலாக அவை செட்தான் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிவது மற்றொரு குறை.

இப்படியான சிறு சிறு குறைகளைத் தாண்டி ஒரு வீக்கெண்டு வாட்சுக்கு ஒரு நல்ல சாய்ஸாக அமைகிறது இந்தப் படம். கூடுதல் சிறப்பாக, இத்திரைப்படம்தான் நடப்பாண்டு ஆஸ்கர் விருதுக்குச் சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் அதிகாரபூர்வ என்ட்ரி. தற்போது வரை அந்த ஆஸ்கர் ரேஸிலும் விடாமல் நீடித்து வருகிறது இந்தப் படைப்பு.
இந்த சேவல் நிச்சயம் பந்தயம் அடிக்கும்!
+ There are no comments
Add yours