பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீட்டின் குழு மனப்பான்மை பல காட்சிகளில் வெளிப்படுகிறது. மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகிய மூவரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றுகிறார்கள். தினேஷ் எங்கிருக்கிறாரோ அதன் எதிர்தரப்பில் விசித்ரா இருப்பார். எனவே மாயா குழுவில் இப்போதைக்கு அவர் இருக்கிறார். விஜய்யும் இந்த அணியில்தான் இருக்கிறார். அந்தப் பக்கம் பார்த்தால் தினேஷ், விஷ்ணு, மணி, ரவீனா ஆகிய நால்வரும் ஒரு டீமாக இருக்கிறார்கள். எல்லை தாண்டி வந்து ரவீனா இந்தப் பக்கமும் சமயங்களில் பேசி விட்டுச் செல்வார். அர்ச்சனாவின் நிலைமைதான் திரிசங்கு சொர்க்கம். இப்போதைக்கு மாயா கட்சியின் அனுதாபியாக இருக்கிறார். இதுதான் தற்காலிக நிலவரம். விஷ்ணு, மணி, ரவீனா ஆகிய மூவரும் இணைந்து எதிர் டீம் பற்றி புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். “மாயாக்கா கூட நீங்கதான் முதன்முதல்ல சண்டை போட்டீங்க” என்று ஏதோ வரலாற்று சாதனை போல புள்ளிவிவரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் ரவீனா. அந்தப் பெயரைக் கேட்டாலே விஷ்ணுவிற்கு கொலைவெறி வந்துவிடும். எனவே உஷ்ணமானார்.
“இன்னிக்கு வரைக்கும் அவங்க ஃபேக்காத்தான் ஆடறாங்க தேவை இருக்கற வரைக்கும்தான் ஒருத்தரை வெச்சுப்பாங்க. இல்லைன்னா தூக்கி எறிஞ்சுடுவாங்க. அவங்க கமாண்ட்ல உன்னைக் கொண்டு வந்துடுவாங்க. நான் அவங்க பப்பெட் கிடையாது. சீரியஸான நட்புல்லாம் நான் வெச்சுக்க மாட்டேன். பூர்ணிமால்லாம் மணியைத்தான் டார்கெட் பண்ணுவா. என் பக்கம்லாம் வர மாட்டா. என்னை நேரடியா தாக்காது. கன்னிங் கேம். நெகட்டிவ் பாயிண்ட்” என்று விஷ்ணு நீளமாக வம்பு பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த அறையில் பூர்ணிமா என்ட்ரி.
எனவே புறணிக்குழு டாப்பிக்கை மாற்றி வேறு எதையோ பேசி ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் பேசியது அரசல் புரசலாக பூர்ணிமா காதில் விழுந்திருக்குமோ, என்னமோ, தன் டீமிடம் சென்று “சேர்ந்து ஆடறோம்ன்னு நம்மளச் சொல்றாங்க. ஆனா அவங்கதான் சேர்ந்து ஆடறாங்க” என்று அனத்தினார்.
+ There are no comments
Add yours