சாக்ஷி மாலிக் எதிர்கொண்டது பேரழிவு- ரித்திகா சிங் வேதனை!!
24 டிச, 2023 – 11:50 IST

2016ம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று என்ற படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். ரியல் குத்து சண்டை வீரரான இவர் அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓமை கடவுளே என பல படங்களில் நடித்தவர், தற்போது ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இதற்கு முன்பு இந்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷனின் உறவினர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது மல்யுத்த வீராங்கனைகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டில்லியில் மீடியாக்களை சந்தித்த சாக்ஷி மாலிக், மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக ஒரு பெண்தான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் போட்டியிட்ட போட்டியாளர்களில் ஒரு பெண் கூட இல்லை எனவும் அவரது வருத்தத்தை தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி குற்றம் சாட்டப்பட்டு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரிஜ் பூஷனின் உறவினரே தலைவராக இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அதனால் தான் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். சாக்ஷி மாலிக்கின் இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் நடிகையும் குத்துச்சண்டை வீராங்கனையுமான ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், சாக்ஷிமாலிக்கை இப்படி ஒரு நிலையில் பார்ப்பது இதயத்தை உடைக்கிறது. ஒலிம்பிக்கில் விளையாடி இந்தியாவுக்கு பெருமை தேடி கொடுத்தவர். இத்தனை ஆண்டுகள் கடின உழைப்பினையும் கனவுகளையும் நம்பிக்கைகளையும் கைவிட்டு நான் விலகுகிறேன் என்று அவர் கூறியிருப்பது மிகப்பெரிய பேரழிவு. தற்போது போராட்டத்தின் போது அவருக்கு நடந்த அவமரியாதை கொடுமையானது என்று பதிவிட்டுள்ளார் நடிகை ரித்திகா சிங்.
+ There are no comments
Add yours