வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜால் தான் தமிழ் படத்திற்கு இசை அமைக்கவில்லை : மலையாள இசை அமைப்பாளர்
16 டிச, 2023 – 12:34 IST
பழம்பெரும் மலையாள இசை அமைப்பாளர் அவுசேப் பச்சன். 200 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள அவர்தான் ஏராளமான பின்னணி பாடகிகளை அறிமுகப்படுத்தினார். ‘ஒரே கடல்’ என்ற படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். கேரள அரசின் விருதை பல படங்களுக்கு பெற்றுள்ளார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக மலையாள படங்களுக்கு இசை அமைத்து வரும் அவுசேப் பச்சன் சில கன்னட படங்களுக்கும், ஆங்கில படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். ஆனால் தமிழ் படங்களுக்கு இசை அமைக்கவில்லை. தற்போது ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‘ரூட் நம்பர் 17’ என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தை ‘தாய்நிலம்’ படத்தை இயக்கிய அபிஷாஷ் ஜி.தேவன் இயக்கி உள்ளார். அஞ்சு பாண்டியா, ஹரிஷ் பெரடி, அருவி மதன், அமர் ராமச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 24ம் தேதி படம் வெளிவருகிறது.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட இசை அமைப்பாளர் அவுசேப் பச்சன் பேசியதாவது:
திரையுலகில் எனது பொன்விழா ஆண்டில் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படத்திற்கு இசையமைக்கிறேன். நான் இருபது வயது வரைதான் கேரளாவில் வசித்தேன். எனது சினிமா பயணத்தை இங்கே சென்னையில்தான் துவங்கினேன். கிட்டத்தட்ட 75 சதவீத நாட்கள் இங்கே சென்னையில்தான் இருந்துள்ளேன். இதுவரை பல நூறு படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆனால் தமிழில் ஏன் நீங்கள் இசையமைக்கவில்லை என கேட்கிறார்கள். எனது 35வது வருட திரையுலக பயணத்தின் போதுதான் என்னிடம் பணியாற்றிய வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் எல்லோரும் தமிழ் சினிமாவில் பிரமாதமாக இசையமைத்துக்கொண்டு இருந்தார்கள். நான் போய் ஏன் அவர்களை கெடுக்க வேண்டும் என மலையாள திரையுலகிலேயே நின்று விட்டேன். என்றார்.
+ There are no comments
Add yours