சென்னை: “அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழை நீர் மற்றும் கழிவுநீரை ஒரே ஒரு பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழிவகுத்துள்ளது. அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்புகளை தாக்குகிறது” என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: “10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு, முழங்கால் அளவு தண்ணீர், குறைந்தது 100 மணிநேரம் மின்வெட்டு என்பது முகத்தில் அறையும் உண்மை. இந்த ஆண்டு ஏற்கெனவே சில புதிய மைல்கல்கள் நிகழ்ந்துள்ளன. வேடிக்கை என்னவென்றால், இது வரலாற்று ரீதியாக ஒரு ஏரியோ அல்லது தாழ்வான பகுதியோ அல்ல. சென்னையின் மற்ற எந்தப் பகுதியையும் விட எங்களிடம் ஏராளமான திறந்தவெளி நிலங்களும், குளங்களும் உள்ளன. வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழை நீர் மற்றும் கழிவுநீர் ஒரே ஒரு பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழிவகுத்துள்ளது. அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்புகளை தாக்குகிறது.
இந்த நேரத்தில் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசரநிலை ஆகியவை மரணத்தில் முடிகிறது. எங்கள் பகுதி மக்களைச் சென்றடையவும், அவர்களுக்கு ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் தொட்டிகளை நிரப்பவும், மீட்பு மற்றும் பிற முக்கியமான தேவைகளுக்கு உதவவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன.
சென்னைவாசிகளின் நம்பிக்கைக்கு பாராட்டுகள், நான் செல்லும் இடங்களில் எல்லாம் மிகவும் நெகிழ்ச்சியும் நேர்மறை எண்ணங்களும் நிலவுகின்றன. தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்” இவ்வ்வாறு சந்தோஷ் நாராயணன் பகிர்ந்துள்ளார்.
10+ continuous years of flooding with weeks of at least knee deep water and power cuts for atleast 100 hours in our locality during every year is our harsh reality. This year is setting new benchmarks already. Funnily enough, it is neither historically a lake nor a ‘low lying’…
— Santhosh Narayanan (@Music_Santhosh) December 5, 2023