சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம்
04 டிச, 2023 – 19:24 IST
கடந்த 2018ல் விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்கிற படத்தை இயக்கியவர் ஆறுமுக குமார். அந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் 5 வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது விஜய்சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால் முழுக்க முழுக்க மலேசியாவிலேயே இந்த படத்தின் படபிடிப்பு நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு ஊர் திரும்பிய இயக்குநர் ஆறுமுக குமார் இந்த படம் பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மலேசியாவில் சூதாட்டம் என்பது மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு விதமான வடிவங்களில் சூதாட்டம் இருக்கிறது. அதை மையமாக வைத்து உருவாகும் பகை, மோசடி, கடன் மற்றும் இது தொடர்பான குற்றங்களின் பின்னணியில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரமே சற்று மர்மமானது தான். இதில் அவர் சில வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
அவருடன் படத்தில் 90% கூடவே பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். படத்தின் கதையே யோகிபாபுவை சந்திப்பதற்காக விஜய்சேதுபதி மலேசியா கிளம்பி செல்கிறார் என்பதாகத்தான் ஆரம்பிக்கிறது. படத்தின் 70 நாட்கள் படப்பிடிப்பில் 53 நாட்கள் யோகிபாபு கலந்து கொண்டு நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours