நீண்ட காலமாகவே கோலிவுட்டில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருவது நடிகர்களின் ஸ்டார் பட்டங்கள்.
நடிகர் ரஜினி காந்த் ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழாவில் சூசகமாகப் பேசி, ‘காக்கா கழுகை தொந்தரவு செய்துகொண்டே இருந்தாலும், கழுகு அதை கண்டுகொள்ளாமல் உயரப் பறந்துகொண்டே இருக்கும். குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் காக்காவால் பறக்க முடியாது’ என்று கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்த சமூக வலைதளங்களில் சர்ச்சையாகியது.
இதையடுத்து ‘லியோ’ வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய்யும், “ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க… அந்த காட்டுல காக்க கழுகு… முயல், மான்… காட்டுல இதெல்லாம் இருக்கும் தான அதுக்கு சொன்னேன் பா!.” என்று சொல்லி சிரித்தார். மேலும், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் பேசியிருந்தார். இதற்கு அவரது ரசிகர்கள் கூச்சலிட்டுக் கத்தினர்.
இது ரஜினி, விஜய் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகி கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன், “கதைகளால் எந்த பிரயோஜனமும் இல்லை சினிமா துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் காக்கா, கழுகு கதைகள், அவருக்கு இந்த பட்டம் இவருக்கு இந்த பட்டம் என்று சொல்வதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் உழைத்தால் மட்டும்தான் உயர முடியும். நாம் உயர்ந்தால் நம் நாடும் உயரும். அன்பால் இணைந்து செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours