Kalaignar 100: ரஜினி, கமல் முன்னிலையில் திரையுலகமே திரளும் பிரமாண்ட கலைஞர் நூற்றாண்டு விழா!

Estimated read time 1 min read

மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடச் சிறப்பு ஏற்பாடுகளை தி.மு.க-வினர் செய்தனர். தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவைத் தமிழ்த் திரையுலகம் சார்பிலும் கொண்டாட இருக்கின்றனர். இதற்கான பிரமாண்ட விழா அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

கருணாநிதி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் சென்னையில் நடைபெற்றது. கலைவாணர் அரங்கில் நடந்த அதன் கூட்டத்தில் சங்கத்தலைவர் முரளி ராமசாமி, துணைத்தலைவர்கள் தமிழ்க்குமரன், அர்ச்சனா கல்பாத்தி உட்பட 400 தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ‘தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு, மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்னை செய்துவரும் ஐந்து நடிகர்களை வைத்துப் படம் தொடங்குவதற்கு முன்பு, தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடர்புகொண்ட பிறகே ஒப்பந்தம் செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். 20 வருடங்களாகப் புதுப்பிக்கப்படாமல் இருந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தினை பதிவுத் துறையில் புதுப்பிக்க உறுதுணையாக இருந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றியதுடன் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கலை நிகழ்ச்சி நடத்திச் சிறப்பாக்கிடவும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது நினைவில் இருக்கலாம்.

திரையுலகம் சார்ப்பில் கொண்டாடப்படவிருக்கும் இவ்விழா குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமியிடம் பேசினேன்.

“தமிழ் சினிமாவில் கலைஞர் ஐயாவின் பங்கு பெருமைக்குரிய ஒன்று. வசனகர்த்தாவாக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக கலைஞர் ஐயா தனிப்பட்ட முறையில் பங்களிப்பு ஆற்றியதுடன், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு எண்ணற்ற வகைகளில் உதவிகள் செய்திருக்கிறார். அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதைப் பெருமையாக நினைக்கிறோம். கலைஞர் ஐயாவிற்கு விழா எடுப்பது குறித்து எங்க பொதுக்குழுவிலேயே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அத்தனை பேரும் ஒருமித்த குரலில் மகிழ்வுடன் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

முரளி ராமசாமி

தொழிலாளர்கள் சங்கத்திலிருந்து (பெப்சி) நடிகர்கள் சங்கம் வரை சினிமாவின் அத்தனை சங்கங்களும் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது. அனைவரும் ஒத்துழைப்பு நல்குகிறார்கள். இந்த விழாவில் பங்கேற்க ரஜினி, கமல் முதல் அத்தனை நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளோம். இந்த பிரமாண்ட விழா முதல்வர் ஸ்டாலின் ஐயா தலைமையில் நடைபெறும். விழாவில் கலைஞர் ஐயா சினிமாவிற்கு ஆற்றிய பணிகள் குறித்த மலரையும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம். விழாவிற்கான தேதி, இடம் ஆகியவை குறித்து விவாதித்து வருகிறோம். முதல்வர் அனுமதியும் அனைத்தும் கிடைத்தபின், முறைப்படி மீடியாவிற்குத் தெரிவிக்க உள்ளோம்” என்றார் முரளி ராமசாமி.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours