‘வாங்களேன்.. ஒரு கப் காஃபி சாப்பிடலாம்’ என்பது மாதிரி “வாங்க.. விசித்ரா மேம் கிட்ட போய் பேசி சமாதானம் ஆயிடலாம்” என்று அமைதிப் பேச்சு வார்த்தைக்கான தூதுவராக மாறி பூர்ணிமா மற்றும் மாயாவை அழைத்துக் கொண்டிருந்தார் அர்ச்சனா.
தன்னைப் பற்றி மாயா கேங் புறணி பேசும் என்பது விசித்ராவிற்குத் தெரிந்திருக்கிறது. பாம்பின் கால் பாம்பறியும். எனவே “கிச்சன்ல அடிக்கடி தலையிடறதா சொல்றாங்க.. சாப்பாடு நல்லா வரணும்ன்னுதான் அதைச் செய்யறேன். மம்மின்னு கூப்பிட்டவங்கள்லாம் என்னை நாமினேட் பண்ணலாம். ஜோவிகா கூட அதைச் செய்யலாம்.. அதானே கேம்?!” என்றெல்லாம் ஸ்போர்ட்டிவ்வாக பேசிக் கொண்டிருந்தார் விசித்ரா. ஆனால் ‘உங்களை நாமினேட் பண்ணுவேன் மம்மி’ என்று ஐஷூ முன்னர் வெளிப்படையாக சொன்னதற்காக ‘உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா’ என்று கண்ணீர் விட்டவரும் இதே விசித்ராதான். ‘ஜோவிகா எதிரிகளை நண்பர்களாக்கி வைத்திருக்கிறாள்’ என்பது விசித்ராவின் ஒற்றை வரி ஸ்டேட்மெண்ட். ஆனால் சிறப்பானது.
‘உன்னைப் போல் ஒருவன்’ – புதிய டாஸ்க்கால் கலகலப்பாக மாறிய வீடு
போட்டியாளர்கள் வீட்டில் கோக்குமாக்காக எதையாவது செய்தால் அதையே காப்பிடியத்து டாஸ்காக்கி விடுவது பிக் பாஸ் ஸ்டைல். இம்முறையும் அப்படியே. கூல் சுரேஷ் போல் மணியும் ரவீனாவும் ஒப்பனையணிந்ததைப் பார்த்ததும் அவரது மூளைக்குள் பல்பு எரிந்திருக்க வேண்டும். ‘உன்னைப் போல் ஒருவன்’ என்கிற டாஸ்க்கை துவங்கி விட்டார்.
ஆண்கள், பெண்களைப் போல நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இதே போல் பெண்களும் ஆண்களைப் போல மாற வேண்டும். ஜோடி என்கிற கணக்கில் பார்க்கும் போது ஆண்களில் ஒருவர் கூடுதலாக இருப்பதால் ‘நகலெடுக்கும்படியாக அவரிடம் ஒன்றும் சுவாரசியமில்லை. மேலும் அவரால் பெண் பாத்திரத்தையும் சரியாக செய்ய முடியாது’ என்கிற நோக்கில் பெண்கள் கூடி ஒரு ஆணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெண்கள் அணி இதற்காக கூடியது. தினேஷை முன்மொழிந்தார் பூர்ணிமா. இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டு மற்றவர்களும் இதையே வழிமொழிந்தார்கள். ஆகவே தினேஷைத் தவிர மற்றவர்கள் இந்த டாஸ்க்கை செய்வார்கள்.
+ There are no comments
Add yours