“ஏழு கடல்தாண்டி ‘பொயட்டிக்’கான காதல் கதை!” – ரக்‌ஷித் ஷெட்டி | sapta sagaradaache ello side b rakshit shetty interview

Estimated read time 1 min read

‘அவனே ஸ்ரீமன் நாராயணா’, ‘777 சார்லி’ படங்களின் மூலம் தமிழுக்கு வந்த கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, இப்போது ‘ஏழு கடல் தாண்டி (சைட் பி)’ படம் மூலம் மீண்டும் வருகிறார். 17-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை ஹேமந்த் எம்.ராவ் இயக்கி இருக்கிறார். ருக்மணி வசந்த்நாயகியாக நடித்திருக்கும் இதன் தமிழ்ப் பதிப்பை, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் கார்த்திகேயன் சந்தானத்துடன் இணைந்து, கல்யாண் சுப்பிரமணியன் தயாரித்திருக்கிறார். சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது. படம் பற்றி ரக்‌ஷித் ஷெட்டியிடம் பேசினோம்.

‘ஏழு கடல் தாண்டி’ இரண்டு பாகமா உருவான படமாச்சே..!

ஆமா. கன்னடத்துல ‘சப்தா சாகராச்சே எல்லோ – (சைட் ஏ) ’, சைட்-பி-ன்னு 2 பாகங்களா எடுத்தோம். முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னால கன்னடத்துல வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இது மொழி தாண்டி, டச் ஆகிற கதை அப்படிங்கறதால இரண்டாம் பாகத்தைத் தமிழ்ல, ‘ஏழு கடல் தாண்டி’ என்ற பெயர்ல வெளியிடறோம்.

முதல் பாகம் தமிழ்ல வெளியாகலை. இரண்டாம் பாகம் இப்ப வெளியாகப் போகுது. முதல் பாகம் பார்க்காம இதைப் பார்த்தா, கதை புரியுமா?

முதல் பாகமும் தமிழ்ல வெளியாகி இருக்கணும். அமேசான் பிரைம் ஓடிடி தள ஒப்பந்தப்படி அந்தப் படத்தை சீக்கிரமே அவங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலை எற்பட்டுச்சு. அதனால மற்ற மொழிகள்ல வெளியிட முடியலை. அமேசான்ல, தமிழ்லயும் அந்தப் படம் இருக்கு. முதல் பாகத்தை அதுல பார்த்துட்டு இந்தப் படத்தைப் பார்த்தா இன்னும் நல்லா இருக்கும். கன்னடத்துல வெளியான நேரத்துல அதிகமான தமிழ் ஆடியன்ஸ்க்கு அந்தப் படம் பிடிச்சது. அதனால, இதை நேரடியா தமிழ்ல வெளியிடணும்னு முடிவு பண்ணினோம்.

இது என்ன மாதிரியான கதை?

‘777 சார்லி’ படத்துக்குப் பிறகு ஒரு காதல் கதையில நடிக்கணும்னு நினைச்சேன். டைரக்டர் ஹேமந்த் எம்.ராவோட ‘கோதி பண்ணா சாதாரண மைகட்டு’ என்ற கன்னடப் படத்துல நடிச்சிருந்தேன். அது அவருக்கு முதல் படம். அவர் 12 வருஷமா மெருகேற்றி வச்சிருந்த ஒரு காதல் கதையைச் சொன்னார். அந்தக் கதையோட தனித்துவமான ஸ்டைல் எனக்குப் பிடிச்சது. என்னால கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது. உடனே அவரோட மீண்டும் இணைஞ்சேன். இது காதல் கதையை கொண்ட ஓர் உணர்ச்சிகரமான படம். முதல் பாகத்துல பிரிஞ்ச காதலர்கள், இரண்டாம் பாகத்துல சந்திக்கிறாங்க. அப்ப அவங்க சூழ்நிலை எப்படியிருக்கு? அவங்க என்ன மாதிரியான முடிவை எடுக்கிறாங்கன்னு கதை போகும். ரொம்ப ‘பொயட்டிக்’கா இயக்குநர் படமாக்கி இருக்கார். முதல் பாகம் வேறொரு காலகட்டம். இரண்டாம் பாகம் வேறொரு காலகட்டத்துல நடக்கும்.

2 காலகட்டத்துக்கும் உங்களை எப்படி மாற்றிக்கிட்டீங்க?

முதல் பாகத்தோட கதை, 2010-ம் வருஷம் நடக்கும். இரண்டாம் பாகத்து கதை, 2020-ல் நடக்கும். முதல் பாகத்துக்காக உடல் எடையை ரொம்ப குறைச்சேன். ஒல்லியா தெரியணுங்கறதுக்காக அப்படி பண்ணினேன். இரண்டாம் பாகத்துக்கு 20 கிலோ உடல் எடையை ஏற்றினேன். தோற்றமும் இரண்டாம் பாகத்துல வேறுபடும்.

படத்துல யார்லாம் நடிச்சிருக்காங்க?

ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிச்சிருக்காங்க, சைத்ரா ஜே ஆச்சார், அவினாஷ், சரத் லோகிதாஷ்வா, அச்யுத் குமார், பவித்ரா லோகேஷ், ரமேஷ் இந்திரா, கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே-ன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். சரண் ராஜ் இசை அமைச்சிருக்கார்.

நேரடி தமிழ்ப் படங்கள்ல நடிக்க உங்களுக்கு அழைப்பு வரலையா?

நானும் தொடர்ந்து தமிழ்ப் படங்கள் பார்க்கிறவன்தான். எனக்கு தமிழ்த் திரைப்படங்கள் பிடிக்கும். தமிழ்ல இருந்து எனக்கு சில வாய்ப்புகள் வந்தது உண்மைதான். ஆனா, அதுக்கு சரியான நேரம் அமையல. ஒரு நடிகரா, இயக்குநரா எனக்கு அடுத்தடுத்த கமிட்மென்ட்ஸ் இருக்கு. அதைவிட்டுட்டு மற்ற மொழிகள்ல பண்ணினா, அது என் படங்களுக்கு ரொம்ப தாமதத்தை ஏற்படுத்தும். அதனாலதான் பண்ணலை.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours