‘பிக் பாஸ் ஷோவை, பீப் பாஸ் ஷோவாக மாற்றிடாதீங்க’
ஐஷூவை வாழ்த்தி வழி அனுப்பி வைத்த கமல், மற்ற போட்டியாளர்களிடம், “உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்… உத்தரவு… அன்புக் கட்டளை… எப்படின்னாலும் வச்சுக்கலாம். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையான மரியாதையைக் காப்பாற்றுங்கள். உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். நீங்கள் பேசுவது எல்லாமே மைக்கில் துல்லியமாகக் கேட்கும். பிக் பாஸ் ஷோவை பீப் பாஸ் ஷோவாக மாற்றி விடாதீர்கள். உங்கள் நடவடிக்கைகளுக்கு ஏற்ப விளைவுகள் உண்டாகும்” என்கிற எச்சரிக்கை கலந்த உபதேசத்துடன் விடை பெற்றுக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை எபிசோடிலாவது விட்டுப் போன பல விஷயங்களை கமல் விசாரிப்பார் என்று எதிர்பார்த்தால் அது நடக்கவில்லை. உள்ளாடையை மாயா நீட்டியது, ஷாப்பிங் பில் மறைத்தது உள்ளிட்ட பல விவகாரங்களை அவர் சாய்ஸில் விட்டது ஏமாற்றமாக இருந்தது. மேலும் மாயா – பூர்ணிமா கூட்டணியின் மீதான விசாரணையின் அணுகுமுறையில் கடுமையோ அழுத்தமோ இல்லாததும் கூடுதல் ஏமாற்றம்.
“இங்க யார் கிட்டயும் பழகி இருக்கக் கூடாது.. பேசினது தப்பா.. பழகினது தப்பா… அது லவ்வா மட்டும்தான் இருக்கணுமா.. அவங்க வீட்ல இதை புரிஞ்சுக்கணும்” என்றெல்லாம் தவிப்புடன் பேசிக் கொண்டிருந்தார் நிக்சன். “எனக்கு வெளியில் போவது பிரச்சனை இல்லை. பெயர் கெடாம இருந்தா சரி. வெறுப்பை சம்பாதிக்கக் கூடாதுன்றது மட்டும்தான் என் கவலை. கார்டு காட்டும் போது கை தட்டுறாங்க. இதையெல்லாம் எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை” என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. பல விஷயங்களை சரியாகப் புரிந்துகொள்ளும் இவரால், தான் மாயாவுடன் சேர்ந்து செய்யும் வேலைகள் வெளியில் எவ்வாறாக தெரியும் என்பது கூடவா தெரியாது?!
கமலின் இத்தனை உபதேசங்களுக்குப் பிறகும் மாயாவிடம் மாற்றம் நேர்வதாக தெரியவில்லை. “கேள்வியே கேட்க கூடாதுன்னு இவங்க நினைக்கிறாங்களா?” என்றெல்லாம் அனத்திய மாயா, ‘தினேஷை இங்கே போட்டு இருக்கணும். தப்பு பண்ணிட்டேன். என்று செய்த தவறை தாமதமாக உணர்ந்தார. “ஐஷுவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா கொஞ்சம் கொஞ்சமா டிஸ்டன்ஸ் வந்துடுச்சு. இந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டார். அவ வெளியே போனதும் நல்லதுக்குத்தான்” என்றெல்லாம் இன்னொரு பக்கம் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார் விசித்ரா.
+ There are no comments
Add yours