மற்றொரு நாயகியாக வரும் அனந்திகா, வில்லன் ரிஷி ரித்விக் ஆகியோர் இப்படத்தில்தான் நடித்துப் பழகியுள்ளார்கள் போல! முறைத்துக் கொண்டே பீர் குடிப்பது, சிகரெட் ஊதுவது மட்டுமே வில்லன் நடிப்பில் சேராது பாஸு! இதுதவிர சிட்டு, காக்ரோச், அங்கிள் (பெயரே அதுதான்) என்னும் கதாபாத்திரங்களில் கொடூர வில்லன்களாக சௌந்தர்ராஜன், டானி, வேலு பிரபாகரன் ஆகியோர் வந்து போகிறார்கள். இவர்களின் நடிப்பு தொலைக்காட்சிகளில் வரும் க்ரைம் தொடர்களில் போடப்படும் சித்திரிக்கப்பட்டவை ரகம்.
தேவையில்லாத குளோஸ் அப்கள், நகராத கேமரா கோணங்கள் என்று ஒளிப்பதிவாளர் கதிரவன் பழைய படங்களுக்கே உரியப் பாணியில் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார். இப்படி ஒரு திரைக்கதைக்கு எப்படிப் படத்தொகுப்பு செய்வது எனப் படத்தொகுப்பாளர் மணிமாறன் திணறியிருக்கிறார். ஆனால் அதற்காகப் பழைய கல்யாண வீடியோவில் வரும் கீழிருந்து மேல், வலமிருந்து இடம் என நகரும் ஆதிகாலத்து டிரான்சிஷன் முறையைத் தவிர்த்திருக்கலாம்.
அதே போல வழக்கமான ‘படத்தின் நீளத்தைக் கத்திரி செய்திருக்கலாம்’ என்ற விமர்சன வரியைச் சொல்வதற்குக் கூட நமக்குத் தயக்கமாகத்தான் இருக்கிறது. காட்சிகள்தான் இப்படிச் சோதனை என்றால் பாடல்களும், பின்னணி இசையும் வேதனை! சாம்.சி.எஸ் – நீங்க வரணும் பழைய பன்னீர் செல்வமா மீண்டும் வரணும்.
படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் முதன்மை வில்லன்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட எல்லோரையும் ஹீரோ கொன்றுவிடுகிறார். ஆனால் மீண்டும் அதே வில்லன்கள் மீண்டும் வருகிறார்கள். பிறகுதான் தெரிகிறது நாம் பார்க்கப் போவது பிளாஷ்பேக் என்று. இதில் வித்தியாசமான பெயர்களை வைத்து வரும் வில்லன்களை விக்ரம் பிரபு ஒன்று அடித்துக் கொல்கிறார், இல்லாவிட்டால் வசனம் பேசிக் கொல்கிறார்.
+ There are no comments
Add yours