சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் நேரு விளையாட்டு அரங்குக்கு முன்பாக குவிந்துள்ளனர்.
‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக விழாவை ரத்து செய்வதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் படத்தின் வெற்றி விழாவை நடத்தவும், பாதுகாப்புக்காகவும் காவல் துறையிடம் தயாரிப்பு நிறுவனம் அனுமதி கோரி மனு அளித்தது. விழாவை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும், தேவைக்கேற்ப பாஸ்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் விழாவுக்கு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 6 மணி அளவில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக ரசிகர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கு முன்பு குவிந்துள்ளனர். மேலும், நிகழ்வில் ரசிகர் மன்ற அட்டை, ஆதார் அட்டை கொண்டுவருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றி விழாவில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்கின்றனர். சிறப்பு அழைப்பாளராக கமல் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.
லியோ: ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடியை வசூலித்தது. 12 நாட்கள் முடிவில் ரூ.540 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours