அதிமுகவை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியதை அடுத்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அதிமுகவை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியதை அடுத்து கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெற்றது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதிலாவது வெற்றி பெற வேண்டும் என அதிமுக வியூகங்களை வகுத்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இந்த தேர்தல் நடப்பதால், எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என அதிமுக முயற்சி செய்யும் என தெரிகிறது. இந்த நிலையில் வெற்றிக்கான வியூகம் வகுப்பதற்காக இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கட்சியின் வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்வது?, ஒரே இடத்துக்கு பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்தால், அதை எந்த முறையில் அணுகுவது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், அதி.மகவின் பொதுச் செயலாளர் என்று சொல்லிக்கொண்டு சசிகலாவும் சுற்றுப் பயணம் செய்து வருவதால், அதன் தாக்கம் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது குறித்தும் முக்கியமாக பேசப்பட இருக்கிறது.

இந்த நிலையில் அதிமுக வழிகாட்டுதல் குழுவை சீரமைக்க வேண்டும் என்றும் 11 பேர் எண்ணிக்கை கொண்ட குழுவை 18 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதிமுகவை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் சிலர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை குழு தலைவராகவோ, அவைத் தலைவராகவே நியமிக்கலாம் என்று கூறினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் கூட்டத்தில் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *