திருவனந்தபுரம்: மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 35. தனது கணவர் மனோஜுடன் திருவனந்தபுரத்தில் வசித்துவந்த நிலையில், இன்று தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த மாதம் மற்றொரு மலையாள நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள் ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்தி வெளிவந்துள்ளன. கடந்த சில வருடங்களாக ரெஞ்சுஷா மேனன் நிதி பிரச்சினையில் இருந்ததாக சொல்லப்படுகின்றன. எனினும், இது தற்கொலைக்கான காரணமா என்பது போலீஸ் தரப்பில் விளக்கப்படவில்லை. அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீஸார், தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிந்துள்ளனர்.
கொச்சியை பூர்விகமாகக் கொண்ட ரெஞ்சுஷா மேனன், தொழில்முறை பரதநாட்டிய நடனக் கலைஞர். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். அதன்பின் ‘ஸ்த்ரீ’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். மம்மூட்டியின் ‘ஒன் வே டிக்கெட்’, ‘பாம்பே மார்ச்’, திலீப்பின் ‘மேரிக்குண்டொரு குஞ்சாடு’, ‘கார்யஸ்தான்’, லிஜோ ஜோஸ் பல்லிசேரியின் ‘சிட்டி ஆஃப் காட்’ ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்து பிரபலமானார்.
தற்கொலை செய்துகொண்டுள்ள ரெஞ்சுஷா மேனன், கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருப்பதுபோல சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததை ரசிகர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். இன்று ரெஞ்சுஷாவுக்கு பிறந்தநாள். பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவர் மரணம் அடைந்துள்ளது மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| தற்கொலை தீர்வல்ல – தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். |
+ There are no comments
Add yours