எனக்குள் இருக்கும் அரசியல்வாதியிடமிருந்து விலகி நில்லுங்கள் : குடும்பத்திற்கு சுரேஷ்கோபி போட்ட கண்டிஷன்
24 அக், 2023 – 13:13 IST
மலையாளத்தில் ஒரு காலகட்டத்தில் மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுரேஷ் கோபி. அதன்பிறகு கடந்த பத்து வருடங்களில் அவர் அரசியல்வாதியாகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இதற்காக சினிமாவில் இருந்து கொஞ்சம் இடைவெளி விட்டவர் தற்போது மீண்டும் முன்னைப்போல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள கருடா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு அரசியல்வாதியாக தான் இருக்க வேண்டும் என்கிற தேவை இல்லை, நல்ல சமூக சேவகராக இருந்தாலே போதும் என்று கூறியிருந்தார். கருடா பட பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கோகுல் சுரேஷ் கூறியது குறித்து சுரேஷ்கோபியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சுரேஷ்கோபி, அரசியலைப் பற்றி கருத்து கூற ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. நான் அரசியலில் இறங்கிய பிறகு இப்போது வரை தினந்தோறும் என்னை விமர்சித்து, திட்டி வெளியாகும் கடுமையான வார்த்தைகளை பார்த்து தான் அவர் மனம் நொந்து இப்படி கூறி இருக்கிறார். எனது மனைவி கூட, நீங்கள் சம்பாதித்த பணம் அதில் என்ன செலவு செய்ய வேண்டும் என்கிற உரிமை உங்களுக்குத் தான் இருக்கிறது என்று கூறி விட்டார். நான் என் குடும்பத்தாரிடம், எப்போதுமே எனக்குள் இருக்கும் அரசியல்வாதியிடம் இருந்து நீங்கள் விலகியே நில்லுங்கள் அப்போதுதான் உங்களது மகிழ்ச்சிக்கு தடை இருக்காது என்று கூறிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours