கோவை:

கோவை உக்கடத்தை சேர்ந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த போது இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தி (35) பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் பிளஸ் 1 முடித்ததும்,  அந்த மாணவி பள்ளியில் மாற்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு கோவை மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2  படித்து வந்தார். அதன்பின்னரும், மாணவிக்கு ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி செல்போனில் தொடர்ந்து டார்ச்சர் தந்துள்ளார். இவரின் நெருக்கடி தாங்காமல் கடந்த 12ம் தேதி அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக, கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஆசிரியர் மீது மாணவி தந்த புகாரை அலட்சியப்படுத்திய தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் (52) என்பவர் மீது போக்சோ சட்டத்தின்  21வது பிரிவின் கீழ் வழக்கு பதிவானது. இவரை 3 தனிப்படை போலீசார் தேடி வந்தனர். பெங்களூரில் இவர் பதுங்கியிருந்த போது தனிப்படை போலீசார் நேற்று முன் தினம் சுற்றி பிடித்தனர்.

நேற்று இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம், ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் காலை 6 மணி முதல் துணை கமிஷனர்கள் ஜெயச்சந்திரன், உமா தலைமையிலான அதிகாரிகள் பல மணி நேரம் தொடர்ந்து விசாரித்தனர்.  மீரா ஜாக்சன் கூறிய பதில்களை வீடியோ பதிவுடன் வாக்குமூலமாக பதிவு செய்தனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட  பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மாணவி வீட்டில் கிடைத்த துண்டுச்சீட்டு

கோவை வடக்கு சரக துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் அளித்த பேட்டி: மாணவி தற்கொலையில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தவிர, மாணவி வீட்டில் இருந்து ஒருவர் துண்டு சீட்டு எடுத்து கொடுத்தார். அதில், உள்ள பெயர்கள் மற்றும் விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மாணவி படித்த பள்ளியில் உள்ள சக மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

மாணவியின் சடலம் தகனம்

பள்ளி முதல்வரை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பள்ளி முதல்வர் கைதான பின், அவரது சடலத்தை நேற்று உறவினர்கள் பெற்று கொண்டனர். வாகனத்தில் ஊர்வலமாக சடலம் மாணவியின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மதியம் வாகனத்தில் ஊர்வலமாக ஆத்துப்பாலம் மின் மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது. இதில் உறவினர்கள், பல்வேறு அமைப்பினர் திரளாக பங்கேற்றனர். மாணவியுடன் படித்தவர்கள், நண்பர்கள் சடலத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, மாணவி தற்கொலை செய்யும் முன் தனது நெருங்கிய நண்பருக்கு செல்போனில் அழைத்து பேசியிருந்தார். அந்த நண்பர் மாணவியின் காலை தொட்டு வணங்கி அஞ்சலி செலுத்தி கதறி அழுதார்.

 

14417 என்ற எண்ணில்

புகார் செய்யலாம்
மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேற்று காலை கோவை உக்கடத்தில் உள்ள மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்றனர். அங்கு மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

அதன்பின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:
மாணவர்களுக்கு போக்சோ பற்றிய விழிப்புணர்வு தேவை. போக்சோ சம்பந்தமாக விழிப்புணர்வை அந்தந்த ஆசிரியர் மூலமாக ஒரு மணி நேரம் நடத்த வேண்டும் என்று கூறி உள்ளோம். இது போன்ற நிகழ்வு யாருக்கும் நடக்கக்கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தருவது எங்களது கடமை. மாணவர்கள் தங்களது குறைகளை 14417 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

மாணவியுடன் ஆசிரியர் பேசும் ஆடியோ

தற்கொலை செய்து கொண்ட மாணவி, மிதுன் சக்கரவர்த்தியிடம் போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில், தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆசிரியரிடம், மேலும் 2 மாணவிகளிடமும் நீங்கள் இதே போல் பேசியதாக மாணவிகள் கூறுகிறார்கள் என்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து பேசும் ஆசிரியர், சத்தியமாக நான் அவர்களிடம் அப்படி பேசவில்லை என்கிறார். தொடர்ந்து மாணவி, எனக்கு தூக்கமே வர மாட்டுது, அதை எல்லாம் நினைத்தால். இது குறித்து நான் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல போறேன் என்கிறார். ஆசிரியர் இது ஒரு விபத்து, நானும் தூங்கி ரொம்ப நாள் ஆகிருச்சு என்கிறார். மாணவி விடுங்க, எனக்கு எப்படி இருக்கும் என உங்களுக்கு புரியவில்லை என கூறி போனை வைத்துள்ளார். இது தவிர, மாணவி, ஆசிரியருக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்-களில் மாணவி, ஆசிரியரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்நிலையில், போலீசார் போனில் பேசிய ஆடியோ மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஆதாரமாக வைத்து விசாரிக்கின்றனர்.

 

தப்பிய அந்த 2 பேர்

மாணவி சாகும் முன் தான் எழுதிய கடிதத்தில் மேலும் 2 பேரின் விவரங்களை குறிப்பிட்டிருந்தார். ரித்தாவோட தாத்தா, எலிசா சாருவோட அப்பா என எழுதியிருந்தார். இவர்கள் மாணவி, 3ம் வகுப்பு படித்த போது டார்ச்சர் செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதற்கு பிறகு அவர்கள் மாணவியை சந்திக்கவில்லை என தெரிகிறது. இந்த விவகாரத்தில் மாணவி குறிப்பிட்ட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முன் வரவில்லை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *