தெலுங்கில் கே.விஸ்வநாத் இயக்கி வெற்றிபெற்ற ‘ஓ சீத கதா’ படத்தின் ரீமேக்தான் ‘மூன்று முடிச்சு’. கே.பாலசந்தர் இயக்கிய இந்தப் படத்தில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், ஒய்.விஜயா, என்.விஸ்வநாத், கே.நட்ராஜ் நடித்திருந்தனர்.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் சிறிய கேரக்டர் என்றாலும் தனது அறிமுகத்தை ஆழமாகப் பதித்திருந்த ரஜினிக்கு இது இரண்டாவது படம். கமலுக்கு இதில் கவுரவ தோற்றம்தான். டைட்டிலில் அப்படித்தான் போடுகிறார்கள். ‘ஆன்டி ஹீரோ’ வேடம் ரஜினிக்கு. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, கே.பாலசந்தர் முதலில் கேட்டது, ‘குடிசை’ஜெயபாரதியை. அவர், படம் இயக்குவதில்தான் ஆர்வம் இருக்கிறது என்று மறுத்துவிட்டதால் அந்த வாய்ப்பு ரஜினிக்குச் சென்றது. தனதுஸ்டைலாலும் நடிப்பாலும் தனது மனசாட்சிக்குப்பயந்த பிரசாத் என்ற வில்லத்தன கதாபாத்திரத்துக்குள் அழகாகப் பொருந்தியிருப்பார் ரஜினி.இந்தப் படத்துக்கு முன், குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஸ்ரீதேவி, இதில்தான் ஹீரோயினாக அறிமுகமானார்.
கமலும், ரஜினியும் நண்பர்கள். இருவருமே, தேவியை விரும்புகிறார்கள். ஆனால் ஸ்ரீதேவி, கமலை விரும்புகிறார். இது தெரிந்தும் தேவியை டார்ச்சர் செய்கிறார் ரஜினி. பிக்னிக் சென்ற இடத்தில் கமல் ஏரியில் தவறி விழுந்துவிட, தனக்கு நீச்சல் தெரியாது என்று பொய் சொல்லி, காப்பாற்றாமல் விட்டு விடுகிறார் ரஜினி. கமல் இறந்துவிடுகிறார். ஒரு கட்டத்தில் ரஜினியின் தந்தை, என்.விஸ்வநாத்தைத் திருமணம் செய்து கொண்டு, ரஜினிக்குத் தாயாகி அதிர்ச்சிக் கொடுக்கிறார் தேவி. பிறகு தேவிக்கும் ரஜினிக்கும் நடக்கும் ரணகள ஆட்டம்தான் படம்.
திரைக்கதையில் பல புதுமைகளைச் செய்திருப்பார் கே.பாலசந்தர். ஒரு காட்சியில், “என் மகன் பிரசாத் பற்றி என்ன நினைக்கிற?” என்று கேட்பார் என்.விஸ்வநாத். அதற்கு, “சரியான வில்லன் மூஞ்சு” என்பார் தேவி. தேவியின் அக்காவாக ஒய்.விஜயா, துணை நடிகையாக நடித்திருப்பார். ஒரு காட்சியில் அவர் தூக்குப் போடுவது போல நடிக்க வேண்டும். ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திக்கும் கமல், தேவியிடம், “நீங்க பேசிட்டிருக்கீங்க. நான் தூக்குல தொங்கிட்டு வர்றேன்” என்று செல்வார். இதுபோன்ற வசனங்கள் இப்போது படம் பார்த்தாலும் புன்னகைக்க வைக்கும்.
இதில் நடிக்கும்போது ஸ்ரீதேவிக்கு வயது 13-தான். ஆனால், 18 வயது பெண்ணாக நடித்திருப்பார். பாடகர் ஜேசுதாஸ் ரசிகையாக வரும் அவருக்கும் கமலுக்குமான காட்சிகள் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருக்கும்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். ‘வசந்தகால நதிகளிலே…’ பாடலின் முடிவில் ரஜினிக்காக எம்.எஸ்.வி.குரல் கொடுத்திருப்பார். ‘ஆடி வெள்ளி’, ‘நானொரு கதாநாயகி’ ஆகிய பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. ரஜினியின் மனசாட்சியாக, ஒரு கயிற்றில் முடிச்சுப் போட்டுக்கொண்டே இயக்குநர் நட்ராஜ் நடித்திருப்பார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பயந்துகொண்டே ஓடுவார் ரஜினி. இந்த மனசாட்சி, காட்சி கதைக்குத் தேவையில்லை என்றும் அப்போது விமர்சிக்கப்பட்டன.
இயக்குநர்கள் மிருணாள் சென், சத்யஜித் ரே படங்களில் நடித்து வந்த, என்.விஸ்வநாத் என்ற கல்கத்தா விஸ்வநாதன் இதில் ரஜினியின் பணக்காரத் தந்தையாக இயல்பாக நடித்திருப்பார். இந்தப் படத்துக்காக கமலுக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.30 ஆயிரம். தேவிக்கு ரூ.5 ஆயிரம், ரஜினிக்கு ரூ.2 ஆயிரம்தான். சூப்பர் ஹிட்டான ‘மூன்று முடிச்சு’, 1976ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது.
+ There are no comments
Add yours