கல்கி இதழில் அகிலன் எழுதிய தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம், ‘பாவை விளக்கு’. அதைப் படமாக்க விருப்பம் தெரிவித்தார், அப்போது கதை, வசனக்கர்த்தாவாகப் புகழ் பெற்றிருந்த ஏ.பி.நாகராஜன். அந்தத் தொடர் கதை முடியும் முன்பே, அட்வான்ஸ் கொடுத்து அகிலனிடம் கதையை வாங்கிவிட்டனர். படத்துக்கானத் திரைக்கதை, வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுத, கே.சோமு இயக்கினார்.
சிவாஜி, சவுகார் ஜானகி, பண்டரி பாய், எம்.என்.ராஜம், வி.கே.ராமசாமி, அசோகன் சாரங்கபாணி உட்பட பலர் நடித்தனர்.
கதாநாயகனான எழுத்தாளன் தணிகாசலத்தை நான்கு பெண்கள் காதலிப்பதுதான் கதை. தேவகியின் ஒருதலைக் காதல், ஆரம்பத்திலேயே தோல்வியில் முடிந்துவிடுகிறது. தேவகியாக பண்டரிபாய் நடித்தார். தாசி குலத்தில் பிறந்த செங்கமலமும், தணிகாசலமும் காதலித்தும் காதல் நிறைவேறவில்லை. இந்த வேடத்தில் குமாரி கமலாவும் ஹீரோவை நேசிக்கும் முறைப்பெண்ணாக சவுகார் ஜானகியும் நடித்தனர். திருமணமாகி மனைவியுடன் வாழும் தணிகாசலத்தைக் காதலிக்கும் வாசகி உமாவாக எம்.என்.ராஜம் நடித்தார்.
கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். ‘காவியமா, நெஞ்சில் ஓவியமா?’,‘ஆயிரம் கண் போதாது’, ‘மயங்கியதோர் நிலவிலே’, ‘நான் உன்னை நினைக்காத’, ‘நீ சிரித்தால்’, ‘வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி’, ‘வெட்கமா இருக்குது’, ‘சிதறிய சலங்கைகள் போல’ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
சிவாஜியும், எம்.என்.ராஜமும் ஷாஜஹான், மும்தாஜாக தோன்றி, ‘காவியமா, நெஞ்சில் ஓவியமா?’என்று பாடும் பாடலை, தாஜ்மகாலின் பல்வேறு பகுதிகளில் படமாக்கி இருந்தனர். இந்தப் பாடல் அப்போது பேசப்பட்டது. இதில் ஆண்குரல் பாடல்களை சி.எஸ்.ஜெயராமன் பாடியிருந்தார். பாடல்கள் வெற்றிபெற்றாலும் அவர் குரல் சிவாஜிக்கு் பொருந்தவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.
ஏ.பி.நாகராஜன், கே.சோமுவின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த கோபண்ணா, எடிட்டர் விஜயரங்கம் மூவரும் இணைந்து விஜய கோபால் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இந்தப் படத்தைத் தயாரித்தனர். 60 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில், சமூகத்தின் அப்போதைய சிந்தனையோட்டத்தில் ஒருவரை, 4 பெண்கள் காதலிப்பதா? என்று் விமர்சனங்களால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. 1960ம் ஆண்டு இதே நாளில் இந்தப் படம் வெளியானது
+ There are no comments
Add yours