சேலம்:

சேலம் சீலநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி, அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு, வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானா அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், அந்த கடையை மூட வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி இந்த இரு சங்கங்களை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் நேற்று மதியம் அங்கு ஊர்வலமாக வந்தனர். இதையொட்டி டாஸ்மாக் கடையின் முன்பு போலீஸ் உதவி கமிஷனர்கள் அசோகன், ஆனந்தி மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஊர்வலமாக வந்து கடையின் முன்பு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஒருவரை இறந்த பிணம் போல் வேடமிட்டு மாலை அணிவித்து வந்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து போலீசாரின் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் கடைக்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர் ஒருவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடைக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீஸ் வேனுக்குள் ஏற்றினார்கள். தொடர்ந்து அவர்களை கைது செய்ய முயன்ற போது, சிலர் சாலையில் படுத்துக்கொண்டு வாகனத்தில் ஏற மறுத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று அன்னதானப்பட்டியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைத்தனர். மேலும் கடையின் முன்பாக திரண்டு இருந்த பொதுமக்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.


இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: –

சீலநாயக்கன்பட்டி டாஸ்மாக் கடை முன்பு மதுப்பிரியர்கள் மது அருந்தி விட்டு அங்கு கூட்டமாக நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். மது அருந்தும் சிலர், பெண்களை கேலி, கிண்டல் செய்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்வதற்கு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடையை மூடும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *