சிவகார்த்திகேயனின் `அயலான்’ பொங்கல் ரேஸில் வருவதால், படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் அவர் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கி வருகிறது. இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்திற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் லைன் அப்கள் பொறுமையும், நிதானமும் கலந்து பிரமிக்க வைக்கின்றன.
‘அயலான்’ படத்தை அடுத்து ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா நடித்து வரும் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ‘ரங்கூன்’ என்ற படத்தை இயக்கியவர். இந்தப் படத்தில் சிவாவின் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படம் மிலிட்டரி தொடர்பான கதை என்றும் இதில் சிவா ராணுவ வீரராக நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள். காஷ்மீரில் ஒரே கட்டப் படப்பிடிப்பாக 75 நாள்கள் நடந்து முடிந்திருக்கிறது.
இதன் படப்பிடிப்பிற்கு இடையே கமலின் அலுவலகத்திற்கு வந்த சிவா, அப்படியே கமலையும் சந்தித்துப் பேசினார். அப்போது கமல், “இவர் நம்ம ஹீரோ” எனப் பெருமிதமாகச் சொல்லி அங்கிருப்பவர்களிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். கமலின் கனிவான அறிமுகத்தால் சிவாவும் நெகிழ்ந்திருக்கிறார். இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இடையே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருப்பதாகத் தகவல். வரும் தீபாவளியன்று படத்தின் டைட்டிலை அறிவிக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.
அதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கிறார் சிவா. ஏ.ஆர்.முருகதாஸ் – சிவாவின் நட்பு பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. சிவா நடித்த ‘மான் கராத்தே’வின் கதையை முருகதாஸ்தான் எழுதியிருந்தார். தவிர, படத்தைத் தயாரித்ததும் அவர்தான். அந்த நட்புதான் இன்று கைகூடியிருக்கிறது. சிவாவைப் பொறுத்தவரை ஒரு படத்தை முடித்துவிட்டுத்தான் அடுத்த படத்தில் கால் வைக்கிறார். கைவசம் உள்ள கமலின் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு முருகதாஸின் படத்திற்குள் வருகிறார் சிவா. இதன் படப்பிடிப்பு அநேகமாக டிசம்பர் இரண்டாவது வாரம் தொடங்கலாம் என்கிறார்கள்.
இதற்கிடையே ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் அடுத்து மீண்டும் சிவாவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இது சிவாவின் 24வது படமாக இருக்கலாம். ‘அயலான்’ படத்தில் ரவிக்குமாரின் உழைப்பும், பொறுமையும் சிவாவைக் கவர்ந்துவிட, அதற்குப் பரிசாக அவருடன் மீண்டும் இணைகிறார் சிவா. இதனை அடுத்து 25வது படத்தைப் பிரமாண்ட இயக்குநர் ஒருவர் இயக்குவார் என்ற பேச்சு இருக்கிறது.
சிவகார்த்திகேயன் அடுத்து யார் இயக்கத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்? கமென்ட்டில் சொல்லுங்கள்.
+ There are no comments
Add yours