கன்னியாகுமரி:

சபரிமலை கேரள மாநிலத்துக்கு மட்டும் சொந்தம் அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. கேரளா மட்டுமின்றி பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் மிக அதிகமாக சபரிமலைக்கு செல்கின்றனர். கொரோனா காரணமாக சபரிமலை கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பம்பை ஆற்றில் குளிக்க தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் கொரோனாவை கருத்தில் கொண்டு நெய் அபிஷேகம் உள்ளிட்டவற்றுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் நீடிக்கிறது. இந்த நிலையில் சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய அவர், ‘ கொரோனா காரணமாக கேரள அரசு சபரிமலையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சபரிமலை கேரளத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை அந்த மாநில அரசு உணர வேண்டும். நெய் அபிஷேகம் போன்றவற்றுக்கு அனுமதி வழங்குவது பற்றி, முதல்வர் பினராயி விஜயன் பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ‘ காசிக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 1813-ம் ஆண்டு முதல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் காசியில் பூஜை, சடங்குகளை செய்து வருகின்றனர். மோடி ஆட்சியில்தான் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 13-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *