கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி
02 அக், 2023 – 11:04 IST
2023ம் ஆண்டில் அடுத்த முக்கிய போட்டி நாளாக தீபாவளி தினம் மட்டுமே உள்ளது. அன்றைய தினம் “ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இருக்கிறது. தீபாவளி போட்டியிலிருந்து ‘அயலான்’ படம் விலகி 2024 பொங்கலுக்குச் சென்றுவிட்டது.
இந்நிலையில் 2024 பொங்கல் போட்டி தற்போது கடுமையாகி உள்ளது. ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தை 2024 பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ‘அரண்மனை 4’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என இரு தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படமும் பொங்கலுக்குத்தான் வெளியாக உள்ளது.
அதனால், 2024 பொங்கலுக்கான போட்டி பலமாக உள்ளது. “லால் சலாம், தங்கலான், அயலான், அரண்மனை 4” ஆகிய படங்கள் போட்டியில் உள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 1150 தியேட்டர்களை இந்த நான்கு படங்களும் பங்கு போட்டுக் கொள்ளுமா அல்லது ஒரு சில படங்கள் அதிலிருந்து விலகுமா என்பது போகப் போகத் தெரியும்.
+ There are no comments
Add yours