நடிகர் மன்சூர் அலிகான் தயாரிப்பில் உருவாகி வரும் படம் சரக்கு. இந்தப் படத்துக்கான ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி நேற்று முன் தினம் சென்னையில் நடந்தது.
படத்தில் நடித்திருக்கிறார் என்கிற முறையில் நடிகர் கூல் சுரேஷும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி தொடங்கியதும் நடிகர் நடிகைகளை வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது நடிகர் கூல் சுரேஷுக்கும் மாலை அணிவித்தனர். மாலையுடன் மேடையில் நின்ற அந்தச் சமயத்தில் ‘ஏம்ப்பா, எல்லாருக்கும் மாலை போட்டீங்க, முக்கியமான ஒருத்தருக்குப் போட மறந்துட்டீங்களே, என இன்னொரு மாலையை வாங்கி தன் அருகில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தொகுப்பாளர் ஐஸ்வர்யா ரகுபதியின் கழுத்தில், யாரும் எதிர்பார்க்காத நொடியில் அவரே போட்டு விட்டார். இதை எதிர்பாராத ஐஸ்வர்யாவின் முகம் சட்டென மாறி, அப்செட் ஆகி விட்டார்.
பிறகு பேச வந்த நடிகர் மன்சூர் அலிகான் கூல் சுரேஷின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன் அவரின் சார்பாக தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.
கூல் சுரேஷ் வலுக்கட்டாயமாக ஐஸ்வர்யாவின் கழுத்தில் மாலையை அணிவித்த வீடியோக்க்கள் சமூக வலைதளங்களில் ஷேர் ஆக, பலரும் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர். பிறகு கூல் சுரேஷும் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
‘நடிச்சுதான் என்னால பெரியா ஆளா வர முடியலை. அதனால ஏதோ கிறுக்குத்தனமா சில வேலைகளைச் செஞ்சு என் பிழைப்பை ஓட்டிட்டிருக்கேன். நான் பண்றது எல்லாமே ஃபன்னுக்குதான். அப்படி விளையாட்டா செஞ்சதுதான் இதுவும். ஆனா ஒரு பெண்ணின் மனசைக் காயப்படுத்திடுச்சுன்னு நினைக்கிறப்ப உண்மையிலேயே வருத்தப்படுறேன்’ என வீடியோவில் பேசியிருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தொகுப்பாளர் ஐஸ்வர்யா ரகுபதியிடமே பேசினோம்.
‘’அதை நினைச்சா எனக்குமே இன்னும் அதிர்ச்சியாதான் இருக்கு. அதுவும் என் தோள்பட்டையைப் பலவந்தமா அழுத்தி, யாரும் எதிர்பார்க்காத நொடியில அப்படி நடந்துக்கிட்டார். ஒருத்தர் பொதுமேடையில திடீர்னு இப்படி நடந்துகிட்டா என்னங்க செய்ய முடியும்? நாம ஏன் பளார்னு அந்தாளு கன்னத்துல ஒரு அடியாவது கொடுக்காம விட்டுட்டோம்னு இப்ப நினைக்கிறேன்.
கிறுக்குத்தனம் பண்றதுல கூட சில எல்லைகள் இருக்கு. தனிப்பட்ட யாரையும் அது பாதிக்காதபடி இருக்கணும்.
இதுக்கு முன்னாடியும் ஒரு நிகழ்ச்சியில எங்கிட்ட வம்பு பண்ணியிருக்கார். பொதுவா இவரோட நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்காதுங்கிறது நிஜம்தான். அதனால இவரை மேடைக்குக் கூப்பிடறப்ப வெறுமனே நடிகர் கூல் சுரேஷ்னு கூப்பிடுவேன்.
அப்படிக் கூப்பிடக் கூடாது; எனக்கு ‘யூ டியூப் சூப்பர் ஸ்டார்’னு பட்டம் இருக்கு, அதைச் சொல்லி என்னைக் கூப்பிட மாட்டீங்களா’னு கேட்டார். அதனால இந்த முறை மாலையை என் கழுத்துல வேணும்னேதான் போட்டிருப்பார்னு எனக்குத் தோணுது. இனியொருமுறை இந்த மாதிரி நடந்துகிட்டா ஒண்ணு கன்னத்துல ஒரு அடியாவது கொடுத்திடுவேன், இல்லாட்டி போலீஸ் புகார் தந்திடணும்னு இருக்கேன்’’ என்கிறார்.
+ There are no comments
Add yours