சதை யார், நகம் யார்?
சேலத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் அமைப்பு செயலருமான பொன்னையன் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், ‘அ.தி.மு.க.,வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இரட்டை தலைமையே சிறந்தது. நகமும், சதையும் தனித்தனியாக செயல்பட வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள். கண்ணும், இமையும் போல், அ.தி.மு.க.,வின் இரட்டை தலைமை சிறப்பாக
உள்ளது’ என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், ‘ஆனால், யார் தேவையான சதை, யார் தேவையில்லாத நகம் என்று தானே, கட்சிக்குள் அடித்து கொள்கின்றனர்… பிரச்னையை மூடி மறைக்காமல், சரி பண்ண முயற்சி செய்யுங்கள்’ என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
‘அரசியல் எப்படி செய்வதாம்?’
கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், ‘கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஊழல் செய்து இருப்பதாக, முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது சரியல்ல. அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டது போல, தற்போது செயல்படவில்லை’ என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், ‘கடந்த ஆட்சியில் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஊழல் செய்தனர் என்று தான் முதல்வர் ஸ்டாலினும் சொல்கிறார்… அ.தி.மு.க.,வினர் யாராவது, நாங்கள் ஊழலே செய்யவில்லை என்று சொல்கிறார்களா, பாருங்கள்…’ என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
+ There are no comments
Add yours