ஸ்டார் செஃப்பான அன்விதா (அனுஷ்கா) தனது சிங்கிள் மதருடன் லண்டனில் வசித்து வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்ட அன்விதாவின் அம்மா, தனது இறுதி நாள்களை இந்தியாவில் செலவழிக்க விரும்பியதால், இருவரும் இந்தியாவுக்கு வருகிறார்கள். அன்விதாவின் அம்மா, ‘எனக்குத் துணையாக இத்தனை நாள் நீ இருந்த. இனிமேல் உனக்கு ஒரு துணையைத் தேடி போ’ எனச் சொல்லிவிட்டு இறக்கிறார். காதலித்துத் திருமணம் செய்தாலும் தனது அம்மாவை ஏமாற்றிவிட்டு அப்பா சென்றுவிட்டதால், காதலின் மீதும் திருமணத்தின் மீதும் நம்பிக்கை இல்லாத அன்விதா, திருமணம் செய்யாமலேயே குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறார்.
தன் விருப்பப்படி குழந்தையைப் பெற்றுக் கொள்ள நல்ல டோனரைத் தேடும் அன்விதாவுக்கு, ஸ்டாண்டப் காமெடியன் சித்து (நவீன்) அறிமுகமாகிறார். முதலிலேயே உண்மையைச் சொல்லாமல் பழகும் அன்விதா மீது சித்து காதல் வசப்படுகிறார். அன்விதாவின் நோக்கம் சித்துவுக்குத் தெரிய வந்ததற்குப் பின், அன்விதாவின் நோக்கம் நிறைவேறியதா, சித்துவின் காதல் கைகூடியதா என்பதே ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் மீதிக்கதை.
சிறிய இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுத்திருக்கிறார், அனுஷ்கா. கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ‘வுமன் சென்ட்ரிக் படத்தில் சோலோ நாயகி’ என்பது போன்ற டெம்ப்ளேட்டுக்குள் சிக்காமல் நல்ல ஒரு கதையைத் தேர்வு செய்ததற்குப் பாராட்டுகள்! கலவையான எமோஷன்களைக் கொண்ட கதாபாத்திரமாக இருந்தாலும், படம் முழுக்க அனுஷ்காவின் முகம் ஒரே எமோஷனை மட்டுமே கடத்துகிறது. அனுஷ்கா கம்பேக் கொடுத்ததில் மகிழ்ச்சி என்றாலும், அவரிடம் ஏதோவொன்று மிஸ்ஸிங்! தொடர்ந்து நடிங்க தேவசேனா!
நவீன் பொலிஷெட்டி… எனர்ஜி பாம். படம் முழுக்க தனது துறு துறுப்பான எனர்ஜியை விடாமல் நடித்திருக்கிறார். வீட்டிற்குள் அப்பாவுக்குப் பயந்த பையனாகவும், தனது ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில் அப்பாவையே கலாய்த்து காமெடி செய்யும் இளைஞனாகவும் நவீன் இந்தக் கதைக்குப் பக்கா சாய்ஸ். காமெடி, காதல், எமோஷன் என அனைத்தையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி முழு படத்தையும் தாங்கியிருக்கிறார்.
நம்ம வீட்டுப் பையனாக, உடன் விளையாடிய நண்பர்களை, அண்ணன்களை நினைவூட்டி நம் மனதிலும் ஜொலிக்கிறார் நவீன். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் அதற்கு அவரின் மெனக்கெடல்களும் அவரை டோலிவுட் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாற்றும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குடோஸ் நவீன் ப்ரோ!
முதல் படத்திலேயே க்ரீஸை விட்டு இறங்கி வந்து சிக்ஸர் அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மகேஷ் பாபு. முழுமையான ரொமான்டிக் காமெடி படத்தைக் கொடுத்து டோலிவுட் சினிமாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஒரு வித்தியாசமான கருவை எடுத்துக்கொண்டு, அந்தக் கதை வேறொரு ட்ராக்கில் போய்விடாமல் அதே சமயம் சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
இவருக்குப் பக்கபலமாகத் திறமையான நடிகர்களும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் போன்ற சீனியர் டெக்னீஷியன்ஸும் கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. சற்று கவனம் குறைந்திருந்தாலும் சில காட்சிகள் முகம் சுளிக்க வைத்திருக்கும். அதனைத் தேவையான மீட்டரில் எழுதி, ஆடியன்ஸிடம் சிரிப்பையும் அப்ளாஸையும் வாங்கி ஒரு மாடர்ன் பாக்யராஜாக ரசிக்கவைக்கிறார், இயக்குநர் மகேஷ் பாபு.
இது ஒரு தெலுங்கு டப்பிங் படம் என்றாலும் இதனை முடிந்தளவுக்குத் தமிழ்ப் படமாகக் கொடுக்கவும் மெனக்கெட்டிருக்கிறார்கள். கதையையும் காட்சியின் தன்மையையும் விட்டு விலகாமல் வசனங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. நவீனுக்குத் தமிழில் குரல் கொடுத்தவருக்குக் கூடுதல் பாராட்டுகள். அந்த எனர்ஜியை துளி கூட மாறாமல் தமிழில் கடத்தியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் நாசர், துளசி எனத் தமிழ் நடிகர், நடிகைக்கு அவர்களே டப்பிங் கொடுத்திருப்பதும் ‘இது ஒரு தமிழ்ப்படம்’ என்ற உணர்வைக் கொடுக்கிறது. படத்தின் இசையமைப்பாளர் ரதனும் தமிழ்தான் என்பதால், பாடல்களிலும் அந்நியத்தன்மை இல்லை. கோபி சுந்தரின் பின்னணி இசையும் கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.
படத்தின் குறையாக இருந்தது நீளம்தான். இன்னும் ஒரு 10, 15 நிமிடம் குறைத்திருந்தால் சுவாரஸ்யமான கதையாக இருந்தது இன்னும் சுவாரஸ்யமானதாக மாறியிருக்கும். ஹீரோவுக்கு இரண்டு ட்விஸ்டுகளைக் கொடுக்கிறார், ஹீரோயின். ஹீரோ முதல் ட்விஸ்டில் இருந்து போராடி வெளியே வந்த பிறகு, மீண்டும் அடுத்த ட்விஸ்ட் கொடுக்கப்படுகிறது. அதிலிருந்து அவர் வெளியில் வருவதற்குக் கிட்டத்தட்ட அதே காட்சிகள் மீண்டும் ரிப்பீட் ஆவது போல் இருப்பது படத்திற்குச் சற்றே தோய்வைக் கொடுக்கிறது. இருந்தாலும் இரண்டாம் பாதியில் இருக்கும் காமெடி காட்சிகளும் உறவின் மீதான நம்பிக்கையைப் பேசும் வசனங்களும் அந்தத் தராசைச் சமன் செய்து, வெற்றி எனும் முள்ளை நிலை நிறுத்துகின்றன. அதனாலேயே ஒரு நல்ல ஃபீல் குட் படமாக ஹார்டின் எமோஜிகளைக் குவிக்கிறது, இந்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’.
பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே நண்பர்களுடன் ஜாலி மோடில் பார்க்க, இ சினிமா மன்ச்சி சாய்ஸண்டி!
+ There are no comments
Add yours