3/24/2023 8:16:51 AM
தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் உருவான திரைப்படம் ’ராவண கோட்டம்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டு விழாவை பிரம்மாண்டமாக மாற்றினர்.
குறிப்பாக சினிமா நிகழ்வுகளில் அதிகம் கலந்துகொள்ளாத அமைச்சர் துறைமுருகன் இந்த விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும் தன் தயாரிப்பில் வெளியாகும் படங்களின் விழாக்களிலேயே அரிதாக கலந்துகொள்ளும் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன், விஜிபி சந்தோஷ், மாஸ்டர் தயாரிப்பாளர் பிரிட்டோ சேவியர் உடன் எம்.பிக்கள் கலாநிதி மற்றும் கனிமொழி ஆகியோரும் கலந்துகொண்டது சினிமா உலகை மட்டுமின்றி அரசியல் உலகிலும் ஹைலைட் ஆகியிருக்கிறது.
மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் பாக்யராஜ், வெங்கட் பிரபு, சுந்தர் சி, நடிகர்கள் ‘மிர்ச்சி’ சிவா, பிரசன்னா, பிரேம் ஜி அமரன், அசோக் செல்வன், கலையரசன், சதீஷ், நடிகைகள் ராதிகா, குஷ்பூ, மீனா, ஆண்ட்ரியா, பூர்ணிமா பாக்யராஜ், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
’மதயானைக் கூட்டம்’ படத்திற்கு பின் கருவேல மர அரசியல், அதன் பின்னணியில் நிகழும் குடிநீர் பிரச்னை என முழுக்க முழுக்க ஆடித்தட்டு தமிழகத்தின் பிரச்னையை மையமாகக் கொண்டு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் உருவாக்கியிருக்கும் படம்தான் ‘இராவண கோட்டம்’.
இசை வெளியீட்டு விழாவைத் தொடந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர் பழக்குழு. இயக்குநர் விக்ரம் சுகுமாரன் பேசுகையில், ’தமிழ்நாட்டை ஆண்ட மற்ற அரசர்கள் பெயர்களை வைத்தால் வளமான, செழிப்பான பகுதியைப் பற்றிச் சொல்லும் கதையாக மாறிவிடும். வறண்ட , வாழ்வாதாரம் இல்லா தமிழகத்தின் நிலையைச் சொல்லத்தான் ‘இராவண கோட்டம்’ என்னும் தலைப்பு. சாந்தனு இல்லையெனில் நிச்சயம் இந்தப் படம் இல்லை.
வெள்ளித்தட்டில் சாப்பிட்டவர், வீட்டுக்குள்ளேயே செருப்புடன் தான் நடப்பார். அப்படிப்பட்டவர் இந்தப் படத்தில் கிட்டத்தட்ட பூரான் கடி எல்லாம் பட்டு, அந்தக் வறண்ட பூமியில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டுக் கூட நடித்தார். வேறு எந்த ஹீரோவாக இருந்தாலும் இப்படியான ஒரு படம் முழுமையாகக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு இந்தப் படத்திற்காக தனது கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார். எத்தனை சிக்கல்கள் வந்தாலும், பிரச்னைகள் இருப்பினும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவ்வளவு ஆதரவு கொடுத்தார்.
சாந்தனு பேசுகையில், எந்தப் படமும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எடுக்கப்படுகிறது. ஒரு சில காரணங்களால் அப்படம் ஜெயிக்காமல் போய்விடும். நானும் ஒரு நல்ல கதைக்காகவும், நல்ல படத்திற்காகவும் காத்திருந்தேன். அதற்கு இந்தப் படம் சரியான வாய்ப்பாக அமைந்தது. படம் முழுக்க நான் மட்டுமல்ல படத்தில் நடித்த அத்தனைப் பேரும் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் நான் தயாரிப்பாளர் கண்ணன் ரவி அங்கிளுக்குதன நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில், இந்தப் படம் எனக்கு வெற்றியானால் எனக்கு லாபம், தோல்வியானால் நல்ல பாடம். ஆனால் இந்தப் படம் வெற்றியானால் இயக்குநர் மற்றும் சாந்தனு உட்பட பலருக்கும் வாழ்க்கை. எத்தனையோ படங்கள் இருக்க ஏன் இந்தப் படம் என கேட்கிறார்கள். உண்மையில் நான் என் திருமணத்திற்காக குடும்பத்தை எதிர்த்து நின்று காவல் நிலையத்தில் திருமணம் செய்துகொள்ள நின்றவேளை ஒரு போன் காலில் என் திருமணத்தை நடத்தி வைத்தவர் பாக்யராஜ். அவருக்கு செய்யும் நன்றியாகத்தான் இந்தப் படத்தை நான் பார்க்கிறேன்.
மற்றபடி விழாவிற்கு வந்தவர்கள் அத்தனை பேரும் என் முகத்திற்காகவும், சாந்தனுவின் நட்பிற்காகவுமே வந்தவர்கள். நான் ஏதோ பினாமியோ, அல்லது குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தவனோ இல்லை. வெறும் 1000 திர்ஹாம் பணத்திற்கு வேலைக்குச் சேர்ந்தவன், இன்று இதே துபாயில் 1000 பேருக்கு சம்பளம் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அத்தனையும் என் உழைப்பால் உருவானது. என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கண்ணன் ரவி.
+ There are no comments
Add yours