கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி நேற்று (பிப்.,19) அதிகாலை மூன்றரை மணியளவில் மாரடைப்பால் காலமானார். சிவராத்திரியை முன்னிட்டு அன்றைய இரவு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் பூஜைக்காக பங்கேற்றிருந்ததை அடுத்து மயில்சாமி உயிரிழந்தார்.
57 வயதாகும் மயில்சாமியின் மறைவு செய்தியை அறிந்து தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வந்தனர். சிறு சிறு கதாப்பாத்திரங்களாக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தையே பெற்றிருந்தார் மயில்சாமி. உதவி என எவர் கேட்டாலும் எந்த தயக்கமும் இல்லாமல் எப்படியாவது அவர்கள் கேட்டதை செய்தே விட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்து அதனை செய்தும் காட்டியவர் என்று பிரபலங்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
மாரடைப்பு ஏற்பட்டதால் மயில்சாமி மறைந்தார் என மருத்துவர்கள் உறுதிபடுத்தியதை அடுத்து பிரேத பரிசோதனை எதுவும் நடத்தாமல் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மயில்சாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களும், திரையுலகினர் வந்து அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, மயில்சாமியின் குடும்பத்தினர் ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அதி தீவிர சிவ பக்தரும் கூட. நாங்கள் இருவரும் சந்திக்கும் போது எம்.ஜி.ஆர், சிவன் பற்றியே அவர் பேசுவார். விவேக், மயில்சாமி போன்ற நடிகர்களின் மறைவு இந்த சமூகத்திற்கே பேரிழப்பு.
அவர் மறைந்தது தற்செயலான விஷயம் கிடையாது. அது சிவனின் கணக்கு. தனது தீவிர பக்தரை சிவராத்திரி அன்றே சிவபெருமான் அழைத்துச் சென்றிருக்கிறார்.” என்று பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, “மயில்சாமியின் கடைசி ஆசையாக ரஜினி சாரை கேளம்பாக்கம் சிவன் கோயிலுக்கு அழைத்து வர வேண்டும் என்பதுதான்” என டிரம்ஸ் சிவமணி கூறியது குறித்த கேள்விக்கு, “சிவன் கோயிலில் பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்ற மயில்சாமியின் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
அவர் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றிருந்தபோது எனக்கு மூன்று முறை ஃபோன் செய்தார். என்னால் எடுக்க முடியாமல் போனதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றிருந்தேன். அதற்குள் மறைந்துவிட்டார்.” என ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours