குழந்தைகளை கடவுளுக்கு சமமானவர்களாக கருதும் நமது நாட்டில் அவர்களது மென்மையான மற்றும் முதிர்ச்சியற்ற மனதினை பயன்படுத்தி அவர்களுக்கெதிராக பாலியல் ரீதியாக வன்முறையைக் கையாளும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்வது வேதனைக்குரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

சிறுமியை கர்ப்பமாக்குவேன் என்ற அர்த்ததில் கானாப்பாடல் பாடி வீடியோ வெளியிட்ட சரவெடி சரண் என்ற இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக வெளியிப்பட்ட அறிக்கையில்;- குழந்தைகளை கடவுளுக்கு சமமானவர்களாக கருதும் நமது நாட்டில் அவர்களது மென்மையான மற்றும் முதிர்ச்சியற்ற மனதினை பயன்படுத்தி அவர்களுக்கெதிராக பாலியல் ரீதியாக வன்முறையைக் கையாளும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்வது வேதனைக்குரிய நிகழ்வாக கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது அந்த குழந்தைகள் மற்றும் அந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் தீரா துயரை அளித்து அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆவதோடு மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகின்றனர். எனவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுக்க பல்வேறு சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட்டு போலீஸ் உட்பட பல்வேறு சமூக நல அமைப்புக்கள் கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் தங்கள் சுயலாபத்திற்காக குழந்தைகளை தவறாகவும் ஆபாசமாகவும் சித்தரித்து வருமானம் தேடும் கும்பலும் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

இந்நிலையில் டோனி ராக் – போட்டி கானா என்ற பெயரில் சரவணன் (எ) சரவெடி சரண் என்கிற கானா பாடகர் பாடியுள்ள ஒரு வீடியோ பாடலில் பச்சிளம் பெண் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்திருப்பது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு வந்ததையொட்டி அவர் மீது திருவள்ளூர் மாவட்ட சைபர் பிரிவில் குற்ற எண். 25/2021 ச.பி. 67 B IT Act படி வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி கானா பாடகர் சரவணன் (எ) சரவெடி சரண் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கு தற்போது விசாரணையிலுள்ளது. இது போன்ற கடுமையான நடவடிக்கையின் மூலமே இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறாக இன்னல்கள் ஏதும் நிகழ்ந்தால் சற்றும் தயக்கமின்றி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

மேலும் இவ்வாறான குழந்தைகளுக்கு எததிராக பாலியல் வன்முறையை தூண்டும் விதமாக ஏதேனும் வீடியோ பதிவுகளோ அல்லது குறுஞ்செய்திகளோ தங்கள் கவனத்திற்கு வரும்போது அந்த பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு 63799 04848 என்ற அவரது பிரத்யேக எண்ணில் தொலைபேசி மூலமாகவோ, வாட்ஸ்ஆப் மூலமாகவோ தகவல் தெரிவித்து காவல் துறையுடன் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஒழிக்க உதவுமாறு திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலமாகவும் தகவல் பரிமாறலாம் எனவும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் இரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *