விருதுநகர்:

மோசடி வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது புதியதாக ஒரு மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர், ரூ10 லட்சம் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ3 கோடி மோசடி செய்தார் ராஜேந்திர பாலாஜி என்பது வழக்கு. இவ்வழக்கில் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் போலீஸ் பிடியில் இருந்து ராஜேந்திர பாலாஜி தப்பி ஓடி தலைமறைவாக இருக்கிறார்.

தேடப்படும் நபர்

இந்நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடாமல் இருக்க தேடப்படும் நபராக- லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை விரைவாக விசாரிக்க கோரி ஒரு மனுவையும் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருக்கிறார்.

கேரளாவில் தலைமறைவு?

தற்போது கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அத்துடன் ஸ்மார்ட் போனை பயன்படுத்தாமல் பழைய பட்டன் மாடல் செல்போனை அவர் உபயோகித்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எந்த நேரத்திலும் கைது?

ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த 600 பேரின் செல்போன்களை தொடர்ந்து போலீசார் கண்காணித்தும் வருகின்றனர். இதனால் ராஜேந்திர பாலாஜி எந்த நேரத்திலும் போலீசிடம் பிடிபடுவார் எனவும் கூறப்படுகிறது. அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் ராஜேந்திர பாலாஜி இப்படி தப்பி ஓடி தலைமறைவானதை ரசிக்கவும் இல்லை என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

மேலும் ஒரு புகார்

இதனிடையே ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சாத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் விருதுநகர் எஸ்.பி.யிடம் இந்த புகாரை கொடுத்துள்ளார். அதில், சத்துணவுப் பணியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ10 லட்சம் மோசடி செய்தார் ராஜேந்திர பாலாஜி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *