தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: 2-வது அதிகாரியை நியமித்து ஐகோர்ட் உத்தரவு | Tamil Film Producers Association Election HC appoints of second Election Officer

Estimated read time 1 min read

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தலுக்கான இரண்டாவது தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திரைப்பட கவுன்சில் உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உள்பட எட்டு தயாரிப்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு செயலாளர்கள், ஒரு பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய இந்தத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தவிர, வேறு சங்கங்களில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் போட்டியிட தகுதியில்லை என கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரபட்சமான இந்த திருத்தத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்.

மேலும், மார்ச் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரி நியமிக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து, வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இந்த தேர்தல் குறித்த அறிவிப்பை ரத்து செய்து , அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தியாகேஸ்வரன், “தேர்தல் நடத்தும் அதிகாரியாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை தன்னிச்சையாக நியமித்தது தவறு” என்று வாதிட்டார். அப்போது தயாரிப்பாளர்கள் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன், “செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட பிறகே தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தலுக்கான இரண்டாவது தேர்தல் அலுவலராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டார். ஏற்கெனவே தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமனுடன் இணைந்து பணியாற்றுவார்.

தேர்தல் முடிவடைந்த பின்னர் அதுதொடர்பான அறிக்கையை ஏப்ரல் 3வது வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார். மேலும் தேர்தலுக்கு பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையை அணுகவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours