பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ‘தற்கொலை செய்துகொள்ளவில்லை, மாறாக கொலை செய்யப்பட்டுள்ளார்’ என, அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ ஊழியர் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புத். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால், முதலில் தொலைக்காட்சிகளில் நடித்துவந்த இவர், ‘திருமதி செல்வம்’ என்ற தமிழ் தொடரின் இந்தி ரீமேக்கான ‘ Pavitra Rishta’ என்றத் தொடரில் நடித்து மிகவும் பிரபலமானார். அதன்பிறகு பாலிவுட் திரையுலகுக்குள் நுழைந்த சுஷாந்த் சிங், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகரானார். குறிப்பாக தோனியின் பயோபிக் படமான ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம் இந்தியவின் மூலை முடுக்கெல்லாம் அவரைக் கொண்டு சேர்த்தது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கின்போது யாரும் எதிர்பார்க்காத வகையில். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய மும்பை காவல்துறை, சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கை முடித்தநிலையில், அவருக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாகவும், அவரது காதலியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் செளபிக் சக்ரபோர்த்தி, சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாம்யூல் மிராண்டா ஆகியோர் சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்ததாக கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு குற்றப்பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது. சுஷாந்த் சிங் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் நெப்போட்டிசத்தால் தான் சுஷாந்த் சிங் மரணம் நிகழ்ந்ததாகவும், உரிய விசாரண நடத்தக்கோரி முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போதெல்லாம் பாய்காட் பாலிவுட் என்ற ஹேஷ்டேக்கை இன்றளவும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ ஊழியர் ரூப்குமார் ஷா, தனியார் செய்திச் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் கூறிய விஷயங்கள் திடுக்கிட வைத்துள்ளது. அதில், “சுஷாந்த் சிங் இறந்தபோது, 5 உடல்கள் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டன. அந்த சடலங்களில், ஒன்று விஐபி சடலம் என்றனர். பிரேதப் பரிசோதனைக்கு சென்றபோதுதான் அது சுஷாந்த் சிங்கின் உடல் என்பது தெரிய வந்தது. அவரது உடலில் பல இடங்களில் அடையாளங்கள் மற்றும் கழுத்தில் இரண்டு முதல் மூன்று இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
பொதுவாக பிரேதப் பரிசோதனை செய்யும்போது வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும், ஆனால் உயர் அதிகாரிகள் புகைப்படங்கள் மட்டுமே எடுக்குமாறு கூறினார்கள். அவர்களின் உத்தரவின்படி அவ்வாறே செய்தோம். சுஷாந்தின் உடலை முதன்முறையாகப் பார்த்தபோது, அது தற்கொலையல்ல, கொலை என்பதை உணர்ந்து, அதனை மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.
மேலும் விதிகளின்படி நாம் செயல்பட வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். இருந்தாலும், சீக்கிரம் புகைப்படங்களை க்ளிக் செய்து, உடலை போலீசாரிடம் ஒப்படைக்கும்படி என் சீனியர்கள் என்னிடம் சொன்னார்கள். அதனால் இரவில்தான் பிரேதப் பரிசோதனை செய்து போலீசாரிடம் ஒப்படைத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
இரண்டரை வருடங்களுக்கும் மேலாக சுஷாந்த் சிங் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்துவந்தநிலையில், மருத்துவ ஊழியரின் இந்த தகவல் புது திருப்பத்தை அளித்துள்ளது. இதனால் சுஷாந்த் சிங்கின் விசாரணை வழக்கு வேறு கோணத்தில் திரும்புமா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours