நடிகையுடன் திருமணத்தை ஒப்புக்கொண்ட இயக்குனர்
26 டிச, 2022 – 13:47 IST

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். அதன்பிறகு வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 படங்களை இயக்கினார். சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். மண்டேலா படத்தை தயாரித்தார்.
பாலாஜி மோகன் தனது முதல் படத்தை இயக்கியபோது காதலித்த அருணா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கு டிவி நடிகை கல்பிகா கணேஷ் அளித்த பேட்டி ஒன்றில் “பாலாஜி மோகன் நடிகை தன்யா பாலகிருஷ்ணனை ரகசிய திருமணம் செய்துள்ளார். தன்யாவை அவரது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு நடிக்க அனுமதிக்க மறுத்து வருகிறார்” என்று கூறியிருந்தார்.
அதன்பிறகுதான் பாலாஜி மோகன், தன்யா பாலகிருஷ்ணன் திருமணம் வெளியில் தெரிந்தது. இந்த நிலையில் பாலாஜி மோகன் தன்யா பாலகிருஷ்ணா ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் “நான் காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேன். ஏழாம் அறிவு, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணாவை கடந்த ஜனவரி 23ம் தேதி திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில், வெப் சீரீஸ்களில் நடிக்கும் தெலங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் என்பவர், எங்கள் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யுடியூபில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதனை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும். அவதூறு கருத்துகளை வெளியிட்டதற்காக 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் நடிகை தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது. அதோடு வருகிற ஜனவரி 20ம் தேதிக்குள் கல்பிகா கணேஷ் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மூலம் பாலாஜி மோகன், தன்யா பாலகிருஷ்ணன் திருமணம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
+ There are no comments
Add yours