சர்க்கஸ் – பாலிவுட்டில் மற்றுமொரு தோல்வி
25 டிச, 2022 – 11:18 IST
இந்தியத் திரையுலகத்தில் ஹிந்தி சினிமாக்கள்தான் கடந்த பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், கடந்த சில வருடங்களாக தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று அந்த ரசிகர்களின் கண்ணோட்டத்தை மாற்றிவிட்டன. அதன் காரணமாக, நேரடி ஹிந்திப் படங்களுக்கான வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்த வருடம் ஹிந்தியில் ஒரு சில படங்கள்தான் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன.
ரோகித் ஷெட்டி இயக்கத்தில், ரன்வீர் சிங், ஜாக்குலின் பெர்னாண்டஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்த ‘சர்க்கஸ்’ படம் இரண்டு தினங்களுக்கு முன்பு ஹிந்தியில் வெளியானது. ஆனால், படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் சுமார் 7 கோடி வசூலும், இரண்டாவது நாளிலும் அதே அளவு வசூலையும் பெற்று மொத்தமாக 14 கோடி வசூலை மட்டுமே ‘சர்க்கஸ்’ பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘லால் சிங் சத்தா, சாம்ராட் பிரித்திவிராஜ், ஷாம்ஷெரா, ராம் சேது’ வரிசையில் இந்த ‘சர்க்கஸ்’ படமும் தோல்விப் படங்களின் வரிசையில் இடம் பிடிக்கும் என்கிறார்கள். சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘சர்க்கஸ்’ படத்தின் வசூல் இப்படி ஆரம்பித்துள்ளது பாலிவுட்டில் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.
+ There are no comments
Add yours