”நடிக்க மறுத்தேன்” – ஆஸ்கர் பட்டியலிலுள்ள 'THE ELEPHANT WHISPERERS' ஆவணப்பட நடிகை பேட்டி

Estimated read time 1 min read

தாங்கள் நடித்துள்ள ஆவணப்படம் ஆஸ்கர் விருதிற்கான இந்தி பட்டியலில் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அதில் நடித்துள்ள பெல்லி புதிய தலைமுறைக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறந்து ஒருசில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்குட்டிகளை பராமரித்து வளர்த்தவர்கள் அங்கு யானை பாகனாக பணியாற்றும் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெல்லி. இவர்கள் இந்த யானை குட்டிகளை எவ்வாறு வளர்த்தார்கள் என்பது குறித்த ஆங்கில ஆவணப்படம் ஒன்று கடந்த 2019 ஆம் ஆண்டு எடுத்து வெளியிடப்பட்டது. ‘THE ELEPHANT WHISPERERS’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது.

image

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் திரைப்பட விருதிற்கு இந்த ஆவணப் படமும் போட்டியிட்டது. அதில் இந்த படம் ஆஸ்கர் விருதுக்கான அடுத்த கட்டத்திற்கு தேர்வாகி இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் இந்த ஆவணப்படத்தில் நடித்துள்ள பொம்மன் மற்றும் அவரது மனைவி பெல்லி ஆகியோருக்கு பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

இதுகுறித்து இந்த ஆவணப்படத்தில் நடித்துள்ள பெல்லி புதிய தலைமுறைக்கு பிரத்தேக பேட்டி அளித்திருக்கிறார். அதில், ”படக்குழுவினர் ஆரம்பத்தில் என்னை அணுகியபோது, குடும்ப சூழ்நிலை மற்றும் வேலைப்பளு காரணமாக நடிக்க முடியாது எனக் கூறினேன். இருப்பினும் படக்குழுவினர் கட்டாயம் நீங்கள் இருவரும் நடித்தாக வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் நான், என் கணவர், பேத்தி ஆகிய மூவரும் நடித்தோம். தெப்பக்காடு, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒன்றரை மாதமாக படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. ஒரு சில நாட்களில் இரவு ஒரு மணிக்கு எல்லாம் படப்பிடிப்பு நடந்தது. உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கூட இந்த ஆவணப்படத்தில் நடித்திருக்கிறேன்.

image

இந்த படம் வெளியான போது அதைப் பார்த்த பலரும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்தி மகிழ்ச்சியை தெரிவித்தனர். புதுச்சேரியில் இருந்து வந்திருந்த சிலர் தங்கள் ஒரு யானைக்குட்டியை வாங்கி இருப்பதாகவும், அதை நீங்கள் தான் பராமரித்து தர வேண்டும் எனவும் என்னிடம் கேட்டனர். ஆனால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. இந்த படம் விருதிற்கான இறுதி பட்டியலில் இடம் பெற்று இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என பெல்லி தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours