“50வது திருட்டை மதுபோதையில் உல்லாசமாக கொண்டாடிய பைக் திருடர்கள் : 30 நாட்களில் 50 வாகனங்களை திருடியது எப்படி..?

Estimated read time 1 min read

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, வாலாஜாபேட்டை ,கலவை, திமிரி, விஷாரம் , சோளிங்கர் , காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. குறிப்பாக இரவு நேரங்களில் வீட்டு வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக அடுத்தடுத்து புகார் வந்தது. ஒரே நாளில் 10 திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததால் , தனிப்படை அமைத்த ராணிப்பேட்டை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

திருட்டு சம்பவம் அரங்கேறிய பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர் சிசிடிவி காட்சிகளில் இரண்டு,மூன்று இளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்வது போன்ற காட்சிகள் கிடைத்தது. சொந்த வீட்டிற்கு வருவது போன்று வரும் திருட்டு கும்பல் ,வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அசால்ட்டாக எடுத்துச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. கிடைத்த காட்சிகளை கொண்டும் அதில் பதிவான அடையாளங்களை வைத்தும் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், ஆற்காடு நகர போலீசார் முப்பதுவெட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் வந்துள்ளனர். அவர்களை போலீசார் நிறுத்தி விசாரித்த போது வாகனத்திற்கான எந்த ஆவணங்களும் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்களை போலீசார் ஆற்காடு நகர காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் சூர்யா என்று தெரியவந்தது.

பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை இவர்கள் தான் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தையே கலக்கிவந்த பலே பைக் திருட்டு கும்பல் என்பதும் தெரிந்தது. 30 நாளில் இந்த கும்பல் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பைக்குகளை திருடியுள்ளனர். இதையடுத்து, டெல்லிகேட் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 20 லட்சம் மதிப்புள்ள பைக்குகளையும் போலீசார் மீட்டனர். இளைஞர்கள் அஜித்குமார்,சூர்யா ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளிகள் சரத்,சஞ்சஜ் ஆகியோரை தேடிவருகின்றனர்.

                -ஆர்.ஜே.சுரேஷ்குமார்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours