சேலம்:
சேலம் தொளசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளி உரிய அனுமதி இல்லாமல் இயங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ளது தொளசம்பட்டி. இங்கே உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளி உரிய அனுமதி இல்லாமல், எவ்விதமான அடிப்படை வசதிகளும் இன்றி இயங்குவதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொளசம்பட்டி வாரச்சந்தைக்கு கிழக்கு புறமாக செயல்பட்டு வரும் தனியார் தொடக்கப் பள்ளியின் மீதுதான் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக உரிய ஆவணங்கள், அனுமதி இல்லாமல் இப்பள்ளி இயங்கி வருவதாகவும், இதுசம்பந்தமாக அரசு அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பியும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் புலம்புகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் கொரோனா வியாதிக்கு அடுத்தபடியாக டெங்கு,ப்ளூ காய்ச்சல் என மக்கள் மீது வியாதிகள் பெரும் தாக்குதல்களை தொடுத்து வருகிறது. இப்பள்ளிக்கு சரியான போக்குவரத்து வசதி கிடையாது, காலை நேரத்தில் பள்ளிக்கு பேருந்தில் ஏற்றி வரும் குழந்தைகளை தூரத்தில் இறக்கிவிட்டு, சேறும் சகதியுமான, தண்ணீர் தேங்கி நிற்கும் சாலையில் நடக்க வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்கள். மாலை பள்ளிவிட்டு திரும்பும் போதும் இதே நிலைதான்.
இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்கின்ற எதிர்பார்பில் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் காத்திருக்கின்றனர்.
– மாறன்
+ There are no comments
Add yours